” துரோகம்.. ரஷ்யாவை முதுகில் குத்திவிட்டனர்.. கண்டிப்பா இது நடந்தே தீரும் ” கொந்தளித்த புடின்..

By Ramya s  |  First Published Jun 27, 2023, 4:27 PM IST

வாக்னர் கிளர்ச்சி தலைவர்கள் ரஷ்யாவை காட்டிக் கொடுத்ததாக குற்றம்சாட்டிய அதிபர் விளாடிமிர், அவர்கள் கட்டாயம் நீதிக்கு முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். 


கடந்த வார இறுதியில் ரஷ்யாவில் கலகத்தை ஏற்பாடு செய்தவர்களை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கண்டித்துள்ளார். அவர்கள் தங்கள் நாட்டையும் போராளிகளையும் தங்கள் காட்டிக் கொடுத்ததாக கடுமையாக சாடி உள்ளார். வாக்னர் குழுவின் தலைவர்கள் ரஷ்யா இரத்தக்களரியில் சிக்கித் தவிப்பதைப் பார்க்க விரும்புவதாகவும் புடின் குற்றம்சாட்டினார். 

ரஷ்ய மக்களுக்கு ஆற்றிய உரையில் ஆவேசத்துடன் அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது “ ரஷ்யாவில் கிளர்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் தங்கள் நாட்டையும் மக்களையும் காட்டிக் கொடுத்தனர். எங்கள் முதுகில் குத்திவிட்டனர். மாஸ்கோவில் கலகம் ஏற்படுத்த நினைத்தவர்கள் நீதிக்கு முன் கொண்டு வரப்படுவார்கள்.” என்று தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

நியூயார்க் நகரில், இனி தீபாவளிக்கு பள்ளி விடுமுறை.. ஆனா இந்த ஆண்டு ஒரு ட்விஸ்ட்..

ரஷ்யர்கள் ஒருவரையொருவர் அடித்து கொல்ல வேண்டும் என்று மேற்குலகம் விரும்புவதாக புடின் குற்றம் சாட்டினார். மேலும் "ஒரே ஒரு சரியான முடிவை எடுத்த அந்த வீரர்கள் மற்றும் வாக்னர் குழுவின் தளபதிகளுக்கு நான் நன்றி கூறுகிறேன். அவர்கள் சகோதரர்கள் இரத்தம் சிந்துவதை விரும்பவில்லை, அவர்கள் கடைசி வரிசையில் நிறுத்தப்பட்டனர். இன்று, [பாதுகாப்பு அமைச்சகம்] அல்லது பிற இராணுவ மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகளுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் ரஷ்யாவுக்கான உங்கள் சேவையைத் தொடர உங்களுக்கு வாய்ப்பு உள்ளது, அல்லது உங்கள் குடும்பம் மற்றும் நெருங்கியவர்களிடம் திரும்பிச் செல்லலாம். விரும்புபவர்கள் பெலாரஸ் செல்லலாம். நான் கொடுத்த வாக்குறுதி நிறைவேறும்." என்று புடின் உறுதியளித்தார்.

கலகத்தின் ஆரம்பத்திலேயே ரத்தம் சிந்துவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும், அதன் ஏற்பாட்டாளர்கள் "தாங்கள் செய்தது தவறு என்பதை உணர்ந்ததாகவும்" புடின் தெரிவித்தார். மேலும், ரஷ்ய சமுதாயத்தின் ஒற்றுமையைப் பாராட்டிய புடின், கலகத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சியை மேற்கொண்ட பெலாரஷ்யன் தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவுக்கு நன்றி தெரிவித்தார்.

வாக்னர் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் பெயரை புடின் நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும், வாக்னர் குழுவினர் "நாட்டிற்கும் அவர்களுடன் இருந்தவர்களுக்கும் துரோகம் இழைத்துவிட்டனர்" என்று புடின் ஆவேசமாக கூறினார்.

எனினும், ரஷ்ய அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிப்பதை வாக்னர் போராளிகளின் தலைவர் மறுத்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு அமைப்பின் மீதான தனது விமர்சனத்தை மீண்டும் வலியுறுத்திய பிரிகோஜின், வாக்னரை கலைப்பதற்கான சமீபத்திய முடிவை எதிர்த்து ரஷ்யாவின் உள்நாட்டு பாதுகாப்பின் பலவீனத்தை நிரூபிப்பதே தனது குறிக்கோள் என்று கூறினார். “ நாங்கள் பல முறை கூறியது போல், சட்டப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தற்போதைய ஆட்சியை கவிழ்க்கும் நோக்கம் எங்களிடம் இல்லை" என்று புடினை குறிப்பிடாமல் ப்ரிகோஜின் கூறினார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி 24 அன்று தொடங்கிய உக்ரைனில் நடந்த போர், வாக்னர் குழுவின் அதே அளவிலான பயிற்சி மற்றும் மன உறுதியை வழக்கமான இராணுவம் பெற்றிருந்தால், அந்த போர் ஒரு நாளுக்கு மேல் நீடித்திருக்காது. ரஷ்ய இராணுவம் இருக்க வேண்டிய அமைப்பை நாங்கள் நிரூபித்தோம். எங்கள் படைகள் மொத்தம் 780 கிமீ கடந்து, மாஸ்கோவிற்கு 200 கிமீ தொலைவில் நிறுத்தப்பட்டன. ரஷ்யா போரை தொடங்கிய பிப்ரவரி 24, 2022 எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான மாஸ்டர் கிளாஸ் இது." என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய பிரிகோஜின் ” எங்கள் முடிவை மாற்றிக் கொள்வதற்கான  எங்கள் முடிவு இரண்டு முக்கியமான காரணிகளிலிருந்து வந்தது," முதலாவது, நாங்கள் ரஷ்யர்கள் ரத்தம் சிந்துவதை விரும்பவில்லை. இரண்டாவதாக, நாங்கள் எங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காக அணிவகுத்துச் சென்றோம், அரசாங்கத்தைக் கவிழ்க்க அல்ல.” என்று தெரிவித்தார். 

கடந்த வாரம் ரஷ்யாவில் என்ன நடந்தது?

வாக்னர் குழுவுக்கும் ரஷ்யாவின் இராணுவத் தலைமைக்கும் இடையே பல மாதங்களாக வளர்ந்து வரும் பதட்டங்களைத் தொடர்ந்து கடந்த வார கிளர்ச்சி ஏற்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு வாக்னர் கூலிப்படையினர் உக்ரைனில் உள்ள கள முகாம்களிலிருந்து எல்லையைத் தாண்டி ரோஸ்டோவ்-ஆன்-டான் என்ற நகருக்குள் நுழைந்த போது பதற்றம் ஏற்பட்டது. பின்னர் வாக்னர் குழுவினர் பிராந்திய இராணுவக் கட்டளையைக் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது, அதே நேரத்தில் அந்த குழுவின் இராணுவ வாகனங்களின் ஒரு நெடுவரிசை வடக்கே மாஸ்கோவை நோக்கி நகர்ந்தது. 

ப்ரிகோஜின் தனது "நீதிக்கான அணிவகுப்பு" "நாடு முழுவதும் பாதுகாப்பில் கடுமையான சிக்கல்களை" வெளிப்படுத்தியதாகக் கூறினார். பிரிகோஜினின் இந்த கிளர்ச்சி, புடின் ஆட்சிக்கு கடந்த 23 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகவும் கடுமையான அச்சுறுத்தலாக பார்க்கப்பட்டது. இதை தொடர்ந்து பெலாரஸ் அதிபரின் சமரச முயற்சியால், சனிக்கிழமை இரவு தனது அணிவகுப்பை நிறுத்திய ப்ரிகோஜின், தனது படையுடன் தங்கள் தளத்திற்கே திரும்பினார். இதனால் ரஷ்யாவில் நீடித்த பதற்றம் தணிந்தது.

வாக்னர் குழு என்பது, பல்லாயிரக்கணக்கான போராளிகளைக் கொண்ட ஒரு தனியார் இராணுவ அமைப்பாகும். உக்ரைனில் மட்டும் 50,000 க்கும் அதிகமானோர் வாக்னர் குழுவை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. வாக்னர் படைகள் உக்ரைன் போரில் முக்கிய பங்கு வகித்து. ரஷ்யா - உக்ரைன் போர் உச்சத்தில் இருந்த போது, பக்முத் நகரை கைப்பற்றுவதில் வாக்னர் குழுவினர் வெற்றி பெற்றனர். இருப்பினும், பிரிகோஜின் அதிகளவில் ரஷ்ய இராணுவத் தலைவர்களால் விமர்சிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்ட பெண் பத்திரிக்கையாளர்.. 9 ஆண்டுகளில் 1 முறை.! திடீர் சிக்கல் - பரபரப்பு

click me!