Ukraine-Russia War: ரஷ்யாவுக்கு ஆதரவாக களமிறங்கிய பெலாரஸ்... உக்ரைனின் வடக்கு பகுதிகளில் நுழைந்து தாக்குதல்!!

By Narendran S  |  First Published Mar 1, 2022, 6:07 PM IST

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதலுக்கு ஆதரவாக பெலாரஸும் களமிறங்கி இருப்பது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 


உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதலுக்கு ஆதரவாக பெலாரஸும் களமிறங்கி இருப்பது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைன் மீது ரஷ்யா படைகள் 6வது நாளாக இன்றும் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, ரஷ்ய படைகள், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. சக்தி வாய்ந்த குண்டுகள் மற்றும் ஆயுதங்களால் உக்ரைன் நாட்டின் ராணுவ தளவாடங்கள் மற்றும் விமான தளங்கள் அழிக்கப்பட்டன. இதற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்தத் தாக்குதலில் ஏராளமான உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. உக்ரைனில் ராணுவ ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், தலைநகர் கிவ்-வை நோக்கி ரஷ்ய படைகள் முன்னேறியுள்ளன. டாங்கிகள், போர் விமானங்களின் மூலம் கிவ்வில் உள்ள முக்கிய ராணுவப் பகுதிகளை தாக்கி வருகின்றன.

Tap to resize

Latest Videos

உக்ரைனுக்கு ஸ்வீடன், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ராணுவ மற்றும் ஆயுத உதவிகளை செய்து வருகிறது. இதனிடையே, போர் நிறுத்தம் தொடர்பாக பெலாரஸில் ரஷ்யா – உக்ரைன் நாடுகளின் பிரதிநிதிகளின் குழு நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தை தொடங்கிய பிறகு உக்ரைனில் தாக்கும் வேகத்தை ரஷ்யா குறைத்தது. ஆனால், எந்தவிதமான முடிவும் எட்டப்படாத நிலையில் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, உக்ரைனில் மீண்டும் கோர தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகிறது. 6வது நாளாக நீடித்து வரும் இந்தப் போரின் ஒரு பகுதியாக, கார்கிவ் நகரில் அமைந்துள்ள அரசு கட்டிடத்தின் மீது ரஷ்ய படைகள் வான்வெளித் தாக்குதலை நடத்தியது.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இந்திய மாணவன் நவீன் சேகரப்பா ஞானகவுடர் உள்பட 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், ரஷ்யாவுக்கு ஆதரவாக பெலாரஸ் படைகளும் உக்ரைனில் தாக்குதல் நடத்தத் தொடங்கியதால் மேலும் பதற்றம் உண்டாகியுள்ளது. ஏற்கனவே ரஷ்யாவுக்கு பெலாரஸ் ஆதரவு தெரிவித்த நிலையில், உக்ரைனின் வடக்குப் பகுதியில் பெலாரஸ் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக, போர் மேலும் தீவிரமடையும் சூழலும் உருவாகியுள்ளது.

click me!