Ukraine-Russia War: அரசுக் கட்டிடங்களை குறிவைக்கும் ரஷ்யா... குண்டுவீச்சு தாக்குதலால் உருகுலையும் உக்ரைன்!!

By Narendran S  |  First Published Mar 1, 2022, 4:10 PM IST

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில் அரசு கட்டிடங்களை குறிவைத்து ரஷ்யா வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. 


உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில் அரசு கட்டிடங்களை குறிவைத்து ரஷ்யா வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போர் இன்று 6வது நாளாக நீடித்து வருகிறது.  சர்வதேச அளவில் பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்தபோதும், உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பில் இருந்து ரஷியா பின்வாங்க தயாராக இல்லை. ஒருபுறம் பேச்சு நடத்த உக்ரைனுக்கு அழைப்பு விடுத்தபோதும், அணு ஆயுதங்களை பயன்படுத்த உத்தரவு, படைகள் குவிப்பு, எல்லைகளை முற்றுகையிடுதல் போன்ற செயல்களில் ரஷியா இறங்கி உள்ளது. இந்த சூழலில் கீவ் நகர் அருகே ரஷிய ராணுவ படைகள் நெருங்கி உள்ளன. இந்த படைகள் வரிசையாக 40 மைல்கள் தொலைவுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனிடையே கீவ் உக்ரைனில் நடந்து வரும் ரஷிய ராணுவ நடவடிக்கைக்கு மத்தியில், தற்போது கெர்சன் நகரை ரஷியா ராணுவம் தாக்கத் தொடங்கியுள்ளது.

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில் அரசு கட்டிடங்களை குறிவைத்து வான்வழி தாக்குதலை ரஷ்யா அதிகரித்துள்ளது. கார்கிவ், செர்னி உள்ளிட்ட குடியிருப்புகள், கட்டிடங்கள் நிறைந்த நகரங்களில் தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. அரசு கட்டிடங்களை குறிவைத்து பீரங்கிகள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கார்கிவ் நகரில் காலை 8 மணிக்கு ரஷ்ய படைகளின் குண்டுவீச்சில் அரசு கட்டிடம் இடிந்து தரைமட்டமான காட்சிகளும் வெளியாகியுள்ளன. தலைநகர் கீவில் நடத்தப்பட்ட குண்டுவீச்சில் கட்டிடங்கள் நொறுங்கி கிடக்கின்றன. கார் உள்ளிட்ட வாகனங்கள் உருக்குலைந்து கிடப்பது போரின் தீவிரத்தை உணர்த்துவதாக உள்ளது. அச்சமடைந்துள்ள மக்கள் அவசர அவசரமாக நகரங்களை விட்டு வெளியேறி வருகின்றனர். கார்கிவ் நகரில் மத்திய சதுக்கத்தின் மீது குண்டுமழை பொழிவதாக மாகாண ஆளுநர் தெரிவித்திருக்கிறார்.

மக்கள் அதிகம் வாழும் இடங்களில் தாக்குதல் நடத்தப்படுவதால் உயிர்சேதம் அதிகம் ஏற்படக்கூடும் என்று இங்கிலாந்து பாதுகாப்புத்துறை தெரிவித்திருக்கிறது. இழப்பை குறைப்பதற்காக இரவு நேரத்தில் தாக்குதல் நடத்த ரஷ்ய படைகள் திட்டமிட்டிருப்பதாகவும் அந்த நாடு கூறியுள்ளது. கார்கிவ் நகரில் கட்டிடத்தின் மீது குண்டு வீசியதில் 5 பேர் உயிரிழந்துவிட்டதாகவும், ஏராளமானோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கிய நகரங்களை முற்றுகையிட்டு இருக்கும் ரஷ்ய ராணுவப்படைகள், பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே போரில் இதுவரை 5710 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது. 29 போர் விமானங்கள், 846 கவச வாகனங்கள் உள்ளிட்டவற்றை அழித்திருப்பதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது. 

click me!