
உலகம் முழுவதும் இருந்து எதிரிகளின் தாக்குதலைத் தடுக்கும் ஏவுகணை தடுப்பு அமைப்பை சீனா உருவாக்கி வருகிறது. அதற்கான முன்மாதிரியை தற்போது உருவாக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது அமெரிக்காவின் 'கோல்டன் டோம்' (Golden Dome) ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்தைப் போன்றது எனக் கூறப்படுகிறது.
‘அபாயங்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும் இந்த அமைப்பு, உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் சீனா மீது ஏவப்படும் ஆயிரம் ஏவுகணைகளை ஒரே நேரத்தில் கண்காணிக்கும் திறன் கொண்டது என்று சீனாவில் இருந்து வெளியாகும் 'சவுத் சீனா மார்னிங் போஸ்ட்' பத்திரிகை தெரிவித்துள்ளது.
1983-ல் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் 'ஸ்டார் வார்ஸ்' (Strategic Defence Initiative) என்ற பெயரில் ஏவுகணைத் தடுப்புத் திட்டத்தை முன்மொழிந்தார். அதைப் போலவே, தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த மே மாதத்தில் 'கோல்டன் டோம்' என்ற பல அடுக்கு ஏவுகணை கவசத்தை உருவாக்க முன்மொழிந்தார்.
இந்தத் திட்டம் விண்வெளி மற்றும் நிலத்தில் நான்கு அடுக்கு பாதுகாப்பை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் இதற்கு சுமார் 175 பில்லியன் டாலர் செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த அமெரிக்கத் திட்டம் இன்னமும் ஒரு தெளிவான தொழில்நுட்ப வடிவத்தை எட்டவில்லை.
ஆனால், சீன விஞ்ஞானிகள் தங்கள் நாட்டிற்கான பாதுகாப்பு அமைப்பின் மாதிரியை உருவாக்கி செயல்படுத்திவிட்டதாக 'சவுத் சைனா மார்னிங் போஸ்ட்' அறிக்கை கூறுகிறது. இந்த அமைப்பு, மக்கள் விடுதலை இராணுவத்தால் (PLA) உருவாக்கப்பட்டு, சோதிக்கப்பட்டு, பயன்பாட்டிலும் இருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
விண்வெளி, கடல், வான் மற்றும் தரை ஆகியவற்றில் உள்ள பல்வேறு சென்சார்களைப் பயன்படுத்தி இந்த அமைப்பு சாத்தியமான அச்சுறுத்தல்களை உடனுக்குடன் அடையாளம் கண்டு பகுப்பாய்வு செய்கிறது.
இது ஏவுகணைகளின் பறக்கும் பாதை, ஆயுதங்களின் வகை, அது உண்மையான போர்க்கருவியா அல்லது போலியா போன்ற முக்கியமான தகவல்களை நிகழ்நேரத்தில் பெற்று, இடைமறிப்பு அமைப்புகளை வழிகாட்டுகிறது.
சீனாவின் நாஞ்சிங் எலெக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த மாதிரி பாதுகாப்பு அமைப்பு, 1,000 தரவு செயலாக்க பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ளும் திறன் கொண்டது என்கிறார்கள். அதாவது இதன் மூலம் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் இருந்து வரும் 1,000 ஏவுகணைகளை ஒரே நேரத்தில் தடுக்க முடியும்.
இந்த அமைப்பு, பல வடிவங்களில் உள்ள முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்புத் தரவுகளை ஒருங்கிணைத்து, ஒட்டுமொத்த பாதுகாப்பு மேலாண்மை திறன்களை மேம்படுத்துகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகளாவிய கவரேஜ் கொண்ட முதல் ஏவுகணை தடுப்பு அமைப்பு இதுவாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.