பெட்ரோலுக்கு 12 மணி நேரம் வரிசையில் நிற்கும் மக்கள்... அவல நிலையில் இலங்கை..!

By Kevin Kaarki  |  First Published May 31, 2022, 2:23 PM IST

பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அரிசி, பால் பவுடர் மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்டவை மிக குறைந்த அளவிலேயே கிடைக்கிறது.


எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்ய அதிக நேரம் ஆகும் என்று நினைப்பவர்கள், இதைப் பற்றியும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் மிகவும் அரிதாக கிடைக்கும் பொருளாக மாறி இருக்கிறது. இந்த நாட்டில் பெட்ரோல், டீசல் வாங்க மக்கள் அதிகபட்சமாக 12 மணி நேரம் வரை வரிசையில் நிற்க வேண்டிய அவலம் ஏற்பட்டு உள்ளது. 

இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அரிசி, பால் பவுடர் மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்டவை மிக குறைந்த அளவிலேயே கிடைக்கிறது. இது மட்டும் இன்றி எரிபொருள் விலை ஆடம்பர பொருளுக்கு இணையாக உயர்ந்து இருக்கிறது. 

Tap to resize

Latest Videos

12 மணி நேர காத்திருப்பு:

பெட்ரோல் பங்க்களின் வெளியே நீண்ட வரிசையில் பொது மக்கள் நிற்கும் காட்சி இலங்கையில் தற்போது சாதாரண ஒன்றாகவே மாறி விட்டது. எரிபொருள் நிரப்பவே அதிக நேரம் ஆகும் நிலையில், உள்ளூர் மற்றும் சர்வதேச அறிக்கைகளின் படி மோட்டார் வாகனங்களை பயன்படுத்துவோர் தங்களின் பயணங்களை திட்டமிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதை தெரிவித்து உள்ளன. 43 வயதான ஆட்டோ ஓட்டுனர் தனது ஆட்டோ ரிக்‌ஷாவுக்கு எரிபொருள் நிரப்ப அரை நாள் காத்திருந்ததோடு, எரிபொருளுக்கு சில மாதங்களுக்கு முன் கொடுத்ததை விட மூன்று மடங்கு அதிக விலை கொடுத்து இருக்கிறார். 

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் அத்தியாசப் பொருட்களின் விலை ஏழை எளிய மக்கள் வாங்க முடியாத அளவுக்கு அதிகரித்து இருக்கிறது. இதோடு மருந்து, மாத்திரை உள்ளிட்ட மருத்துவ பொருட்களுக்கும் இலங்கையில் தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டு உள்ளது. 

இந்தியா உதவி:

கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை நாட்டிற்கு இந்தியா தொடர்ந்து உதவி செய்யும் என அறிவித்து இருக்கிறது. அந்த வகையில், கடந்த வாரம் திங்கள் கிழமை இந்தியா சார்பில் இலங்கைக்கு 40 ஆயிரம் மெட்ரிக் டன் பெட்ரோல் அனுப்பப்பட்டது. முன்னதாக 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசல் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், இலங்கை இந்தியாவிடம் 500 மில்லியன் டாலர்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்க இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுத்து இருக்கிறது. 

click me!