வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் சீனாவில் வைத்து இந்தியாவை தாக்கி பேசினார்.
Muhammad Yunus attacked India:இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த ஆண்டு பெரும் கலவரம் ஏற்பட்டதால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதனைத் தொடர்ந்து வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் நியமனம் செய்யப்பட்டார். முகமது யூனுஸ் பதவியேற்ற பிறகு வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது.
இந்தியாவுக்கு எதிராக பேசிய முகமது யூனுஸ்
வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் இந்தியா மீது தொடர்ச்சியாக சில எதிர்மறையான கருத்துகளை முன்வைத்து இருந்தார். இதனால் பாகிஸ்தானை போன்று அவரும் சீனாவுக்கு கூஜா தூக்குவதாக தகவல் வெளியாகி இருந்தன. இந்நிலையில், சீனா சென்றுள்ள முகமது யூனுஸ் இந்தியாவை தாக்கி பேசியிருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
நுழைவாயிலாக சீனா பயன்படுத்தலாம்
அதாவது முகமது யூனுஸ் 4 நாள் பயணமாக சீனா சென்றுள்ளார். சீன தலைநகர் பீஜிங்கில் நிலையான உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி குறித்த உயர்மட்ட வட்டமேசைக் கூட்டத்தில் உரையாற்றிய முகமது யூனுஸ், இந்தியாவின் நிலத்தால் சூழப்பட்ட வடகிழக்கு பிராந்தியத்திற்கும், நேபாளம் மற்றும் பூட்டானுக்கும் நுழைவாயிலாக வங்கதேசத்தை சீனா பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளார்.
கடலின் ஒரே பாதுகாவலர் நாங்கள் தான்
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு வங்கதேசம் "கடலின் ஒரே பாதுகாவலர்" என்று அவர் கூறினார். அதாவது "இந்தியாவின் ஏழு மாநிலங்கள், ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் கிழக்குப் பகுதி, அவை நிலத்தால் சூழப்பட்ட பகுதி. அவை கடலை அடைய எந்த வழியும் இல்லை. இந்தப் பகுதி முழுவதற்கும் நாங்கள் மட்டுமே கடலின் பாதுகாவலர்கள்" என்று முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் உற்பத்தி செய்து சீனாவில் விற்கலாம்
தொடர்ந்து பேசிய முகமது யூனுஸ், ''வடகிழக்கு இந்தியா சீனப் பொருளாதாரத்தின் விரிவாக்கமாக செயல்பட வேண்டும். இந்த பிராந்தியத்தில் நீங்கள் (சீனா) பொருட்களை உற்பத்தி செய்யுங்கள். பொருட்களை சந்தைப்படுத்துங்கள். நேபாளத்தில் நீர் மின்சாரம் உள்ளது, பூட்டானில் நீர் மின்சாரம் உள்ளது. அவற்றை பயன்படுத்திக் கொள்ளூங்கள். நீங்கள் வங்கதேசத்தில் உற்பத்தி செய்து சீனாவில் விற்கலாம்'' என்றார்.
இந்தியாவுக்கு பெரும் சவால்
ஏற்கெனவே சீனா அருணாச்சல பிரதேச எல்லையில் குடைச்சல் கொடுத்து வருகிறது. மறுபக்கம் பாகிஸ்தான் எல்லையில் நீண்டகாலமாக தொல்லையாக உள்ளது. இதனால் மியான்மர் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் கூட்டாண்மைகளை வலுப்படுத்தவும். சீன செல்வாக்கை எதிர்க்கவும் இந்தியா தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் முகமது யூனுஸின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன. இது இந்தியாவின் வடகிழக்கு மீதான இறையாண்மையை சவால் செய்யும் விதமாக அமைந்துள்ளது.
சீனாவின் வலையில் வீழ்ந்த வங்கதேசம்
இந்தியா ஆக்ட் ஈஸ்ட் கொள்கையின் கீழ் எல்லையோர உள்கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறது. மியான்மர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவுடனான சாலை மற்றும் ரயில் இணைப்புகளை மேம்படுத்துகிறது. இப்போது முகமது யூனிஸின் கருத்து இதற்கு முட்டுக்கட்டை போடும்விதமாக இருக்கிறது. இந்தியாவின் அண்டை நாடுகளை வளைத்துபோடுவதை சீனா வேலையாக வைத்து இருக்கிறது. ஏற்கெனவே பாகிஸ்தான், இலங்கைக்கு கடன்களை அள்ளிக்கொடுத்து தங்கள் கைகளுக்குள் வைத்துள்ள சீனா இந்தியாவின் எல்லைப் பகுதிகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. இந்நாள் வரை இந்தியாவுடன் நெருக்கமாக இருந்த வங்கதேசத்தையும் சீனா இப்போது தங்கள் வலையில் வீழ்த்தி இருப்பது இந்தியாவுக்கு புதிய தலைவலியாக அமைந்துள்ளது.