சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புற குடும்பத்தைச் சேர்ந்த 18 வயது யங் என்ற இளம் பெண் தான் வேலை பார்க்கும் அலுவலக பாத்ரூமில் வசித்து வருகிறார்.
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புற குடும்பத்தைச் சேர்ந்த 18 வயது யங் என்ற இளம் பெண் தான் வேலை பார்க்கும் அலுவலக பாத்ரூமில் வசித்து வருகிறார். ஒரு அபார்ட்மெண்டில் வாடகைக்குக் குடியிருக்கும் அளவுக்குச் செலவு செய்ய முடியாத காரணத்தால் ரூ.588 (50 யுவான்) வாடகை செலுத்தி அலுவகக் குளியலறையில் வசிக்கிறார்.
சவுத் சைனா மார்னிங் போஸ்ட்டில் வெளியான ஒரு அறிக்கையின்படி , யங் ஜுஜோவில் உள்ள ஒரு பர்னீச்சர் கடையில் பணிபுரிகிறார். அங்கு அவர் மாத சம்பளம் ரூ.31,776 (2,700 யுவான்) பெறுகிறார். இது அந்த நகர மக்களின் சராசரி சம்பளமான ரூ.88,266 (7,500 யுவான்) ஐ விட மிகக் குறைவு.
உள்ளூரில் அபார்ட்மெண்ட் வாடகை ரூ.9,415 (800 யுவான்) முதல் ரூ.21,184 (1,800 யுவான்) வரை இருக்கிறது. முதலில் ஒரு அபார்ட்மெண்டில் வசித்த யங் வாடகை தவிர மற்ற அடிப்படை வசதிகளும் பணம் இல்லாமல் அவதி அடைந்தார். இப்படி ஒருநாள் மிகக் கடினமான சூழ்நிலையில் சிக்கிக்கொண்டபோது இந்த ஐடியா தோன்றியிருக்கிறது. உடனே தனது முதலாளியை அணுகி, ஆறு சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அலுவலக பாத்ரூமில் மாதம் ரூ.588 வாடகை தந்து வசிக்க அனுமதி பெற்றுள்ளார்.
சீன சமூக ஊடக தளமான டூயினில் யங் தனது வாழ்க்கை பற்றிய பதிவுகளைத் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். அவரது பதிவுகளைப் பார்க்க் 16,000 பார்வையாளர்கள் உள்ளனர். குளியலறையில் துணிகளைத் துவைத்து, கூரையில் உலர்த்துகிறார். தான் வசிக்கும் இடம் பாத்ரூமாக இருந்தாலும் அதைச் சுத்தமாக வைத்திருப்பதை உறுதிசெய்கிறார்.
வேலை நேரங்களில், வாடிக்கையாளர்கள் மற்றும் பிற ஊழியர்கள் அந்த பாத்ரூமை பயன்படுத்துகிறார்கள். எனவே தான் வேலைக்குச் செல்லும்போது தன்னுடைய பொருட்களை பேக் செய்து வைத்துவிடுகிறார்.
யங்கின் நெருக்கடி நிறைந்த வாழ்க்கை பற்றிய பதிவு வைரலானதால், சமூக ஊடக பயனர்கள் அவர் மீது அனுதாபத்துடன் கருத்து தெரிவித்து வருகிறார்கள். "ஒருவர் தங்களால் இயன்றதைச் செய்வதை நான் விமர்சிக்க விரும்பவில்லை. அந்த இளம் பெண் நலம்பெற வாழ்த்துகிறேன்" என்று ஒரு பயனர் கூறியுள்ளார். மற்றொரு பயனர் தனது சூழ்நிலையை சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டது மிகவும் பாராட்டத்தக்கது எனத் தெரிவித்துள்ளாப்.
இன்னொரு பயனர், "இது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. கடினமாக உழைக்கத் தயாராக இருப்பவர்களுக்கு உலகில் அதிக சமத்துவம் இருக்க வேண்டும். அதே நேரத்தில் வேலை செய்ய மறுக்கும் பலர் முழு நிதியுதவியுடன் கூடிய வாழ்க்கை முறைகளைப் பெறுகிறார்கள்." என கவலையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
கடினமான சூழ்நிலையில் வசதிதாலும், தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், ஒருநாள் தனக்கென ஒரு வீடு அல்லது கார் வாங்குவதற்கு போதுமான பணத்தைச் சேமிக்க முடியும் என்று நினைப்பதாகவும் யங் நம்பிக்கையுடன் கூறுகிறார்.