நேற்று முழுவதும் உக்ரைனின் கிழக்குப் பகுதி நகரங்களில் ராணுவ நிலைகளை குறிவைத்து ரஷ்ய விமானப்படை குண்டுகளை வீசியது. தலைநகர் கீவில் ராணுவ நிலையை குறிவைத்து ரஷ்ய படைகள் முன்னேறி வரும் நிலையில், கீவ் நகரில் இன்றும் குண்டு மழை பொழிந்து வருகிறது.கீவ் நகரை நோக்கி ரஷ்ய படைகள் முன்னேறுவதன் மூலம் உக்ரைனில் ஜெலன்ஸ்கி தலைமையிலான அரசை நீக்கிவிட்டு, தனது ஆதரவு அரசை ரஷ்ய அதிபர் புடின் நிறுவ முயற்சிப்பதாக அமெரிக்க அரசின் உயரதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவை எதிர்கொள்ள உதவுமாறு உக்ரைன் அரசு கோரிவரும் நிலையில், உக்ரைனில் இருந்து ரயில்கள், கார்கள் மூலம் வெளியேற அந்நாட்டு மக்கள் முயன்று வருகின்றனர்.மேலும் உக்ரைன் ராணுவம் நடத்திய தாக்குதலில் 800 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.மேலும் ரஷ்யாவின் 30 டாங்கிகள்,7 விமானங்கள்,60 ஹெலிகாப்டர்களும் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ருமேனியா,ஹங்கேரி,போலந்து நாடுகளின் வழியே மீட்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு சார்பில் தில்லியில் கட்டுபாட்டு அறை அமைக்கப்பட்டு, உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் அங்கு சிக்கியுள்ள மாணவர்கள் உட்பட இந்திய மக்களை பாதுகாப்புடன் மீட்க வேண்டும் என்று பல தரப்பிலும் கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்நிலையில் உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்களை அண்டை நாடுகளான ரூமேனியா,ஹங்கேரி வழியாக மீட்க மத்திய அரசு முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மாணவர்களை அழைத்து வர ருமேனியாவுக்கு 2 ஏர் இந்தியா விமானங்களை இயக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
உக்ரைனிலிருந்து சாலை மார்க்கமாக ருமேனியா,ஹங்கேரி நாடுகளுக்கு அழைத்து வந்து அங்கிருந்து விமானத்தில் இந்தியா அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.