
எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருந்து தெற்கே 220 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேவாலயத்திற்குச் செல்வதற்காக சுமார் 50க்கும் மேற்பட்ட காப்டிக் இனத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் இரண்டு பேருந்துகளில் சென்று கொண்டிருந்தனர்.
பேருந்து புனிதர் சாமுவேல் சாலை அருகே வந்த போது, அங்கு மறைந்திருந்த முகமூடி அணிந்திருந்த மர்ம நபர்கள், பேருந்தை இடைமறித்தனர். மேலும் எங்கு செல்கிறீர்கள் என்று கேட்ட பின், இயந்திர துப்பாக்கியைக் கொண்டு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.
இதில் 26 பேர் நிகழ்விடத்திலேயே குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தாக்குதல் குறித்து வழக்குப் பதிவு செய்த அந்நாட்டுக் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை தீவிரமாகத் தேடி வருகிறது.
காப்டிக் எனப்படும் சிறுபாண்மை இனத்தைச் சேர்ந்த இக்கிறிஸ்தவர்கள் மீது கடந்த சில மாதங்களில் பல முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.