
ஹாலிவுட்டில் படங்களில் ‘ஜேம்ஸ்பாண்டாக’ வந்து உலகையே கலக்கிய ரோஜர்மூர் நேற்று காலமானார். அவருக்கு வயது 89.
ஹாலிவுட் படங்களில் ஜேம்ஸ்பாண்ட் படத்துக்கென தனி ரசிகர்கள்பட்டாளம் உண்டு. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு நடிகர் ஜேம்ஸ்பாண்டாக வலம் வந்து தங்களுக்கே உரிய துப்பறியும் பானியில் ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளனர். ேஜம்ஸ்பாண்ட் படத்தில் வரும் கார், துப்பாக்கி, உடை, ஸ்டையில், நவீன தொழில்நுட்பம் ஆகியவற்றை காண்பதற்கு ரசிகர் கூட்டம் உண்டு.
அந்த வகையில் ஜேம்ஸ்பாண்ட் வரிசையில் 3-வதாக வந்து அசத்தியவர் நடிகர்ரோஜர் மூர். மிகச்சிறந்த ஹாலிவுட் நடிகரான ரோஜர் மூர் நடித்த ‘லிவ் அன்ட் லெட் டை’, ‘ஸ்பை கூ லவ்டு மீ’ ஆகிய படங்கள் சக்கைபோடு போட்டு உலக அளவில் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவை. ஜேம்ஸ்பாண்ட் தோற்றத்தில் ஏறக்குறைய 7 படங்களில் ரோஜர் மூர் நடித்துள்ளார்.
கடந்த 1927ம் ஆண்டு லண்டன், ஸ்டாக்வெல் நகரில் ரோஜர் மூர் பிறந்தார். 2-ம் உலகப்போர் முடிந்தவுடன் தொலைக்காட்சி, சினிமாக்களில் சிறிய வேடங்களில் நடிக்க ரோஜர் மூர் தொடங்கினார். அங்கிருந்து ஹாலிவுட்டுக்கு மாறினார்.
1972ம் ஆண்டுவரை ஜேம்ஸ்பாண்டாக நடித்து வந்த சீன் கேனரிக்கு அடுத்தார்போல், ரோஜர்மூர் ஜேம்ஸ்பாண்டாக வலம் வந்தார். ‘லிவ் அன்ட் லெட் டை’ என்ற படத்தில் ஜேம்ஸ்பாண்டாக ரோஜர் மூர் அறிமுகமானார். அதன்பின் 10 ஆண்டுகளாக ஹாலிவுட்டில் ஜேம்ஸ்பான்ட் கதாபாத்திரத்தில் வலம் வந்துரோஜர்மூர் அசத்தினார்.
‘தி மேன் வித் கோல்டன் கன்’, தி ஸ்பை கூ லவ்டு மீ’, ‘மூன்ரேக்கர்’, ‘பார் யுவர் ஐஸ்ஒன்லி’, ‘ஆக்டோபுஷி’, ‘ஏ வியூ டூ ஏ கில்’ ஆகிய படங்களில் ஜேம்ஸ்பாண்டாகரோஜர் மூர் நடித்த படங்களாகும்.
பின் 1991ம் ஆண்டு யுனெசெப் நிறுவனம் ரோஜர் மூரை நல்லெண்ணதூதுவராக நியமித்தது. 2003ம் ஆண்டு இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தால் நைட் பட்டமும் , 2008ம் ஆண்டுபிரான்ஸ் அரசு ரோஜர் மூரை கலை இலக்கியத்துக்கான தலைவராக நியமித்தது.
தனது கடைசி காலத்தை சுவிட்சர்லாந்தில் கழித்து வந்த ரோஜர் மூர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் தனது 89வயதில் நேற்று மரணமடைந்தார். இதை அவரின் குடும்பத்தினரும் உறுதி செய்துள்ளனர்.