
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வீட்டின் வெளியே நின்று கொண்டு இருந்த சீக்கியர் மீது மர்ம நபர் இனவெறியுடன் பேசி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியுள்ளார். இந்த சம்பவம் அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தடுத்து தாக்குதல்
கடந்த வாரம் கன்சாஸ் நகரில் மென்பொறியாளர் சீனாவாஸ் குச்சிபோட்லா மதுபான விடுதியில் இனவெறியுடன் பேசி, கப்பற்படை வீரர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பீதி அச்சம்
இரு நாட்களுக்கு முன் சவுத் கரோலினாவில் மளிகைக் கடை வைத்திருந்த இந்தியர் ஹர்னிஷ்படேல் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இப்போது சீக்கியர் என அடுத்தடுத்து நிகழும் இனவெறித் தாக்குதல் இந்தியர்கள் மத்தியில் பெரிய பீதியும், பாதுகாப்பு அச்சமும் ஏற்பட்டுள்ளது.
தகராறு
வாஷிங்டன், கென்ட் நகரில் வசித்து வருபவர் தீப் ராய். சீக்கியவரான தீப் ராய், நேற்று தனது வீட்டின் முன் நிறுத்தப்பட்டு இருந்த காரின் பழுதை சரி செய்து கொண்டு இருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு அமெரிக்கர், தீப் ராயிடம் தகராறு செய்துள்ளார்.
துப்பாக்கி சூடு
ஏன் எங்கள் நாட்டில் இருக்கிறீர்கள்?, உங்கள் நாட்டுக்கு திரும்பச் செல்லுங்கள். என்று கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையை வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது அந்த அமெரிக்கர் திடீரென தான் மறைத்துவைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து தீப் ராய் மீது சுட்டுவிட்டு தப்பினார்.
மருத்துவமனை
இந்த சத்தம் கேட்டு அலறியடித்து வந்த தீப் ராய் குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து, போலீசில் புகார் செய்தனர். ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்ட தீப் ராய், இப்போது பேசி வருகிறார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இனவெறியா?
இது குறித்து கென்ட் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கென்ட்போலீஸ் தலைமை அதிகாரி கென் தாமஸ் கூறுகையில், “ சீக்கியருக்கு உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. நன்றாகப் பேசுகிறார். அவரிடம் விசாரணை நடத்தியதில், அந்த மர்மநபர் முகத்தை பாதி மறைத்து துணி கட்டி இருந்ததாகவும், 6 அடி உயரம் இருந்ததாகவும் தெரிவித்தார்.இது இனவெறியுடன் தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். எப்.பி.ஐ. மற்றும் சட்ட அதிகாரிகளின் உதவியையும் நாடி இருக்கிறோம்'' என்றார்.
கண்டனம்
ரென்டன் நகரில் வசிக்கும் சீக்கிய சமூகத்தின் தலைவர் ஜஸ்மித் சிங் கூறுகையில், “ சீக்கியர் மீது துப்பாக்கி சூட்டால் அவர்களின் குடும்பம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக சீக்கியர்கள் மீதான இனவெறிப் பேச்சும் அதிகரித்துள்ளது. இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டபின், சீக்கியர் மீதான தாக்குதல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.'' எனத் தெரிவித்துள்ளது.