உருகுவே கடற்பகுதியில் நின்ற கப்பலில் 80 ஆஸ்திரேலியர்களுக்கு கொரோனா

By karthikeyan V  |  First Published Apr 6, 2020, 9:45 PM IST

தெற்கு அட்லாண்டிக் கடலில் உருகுவே நாட்டில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஆஸ்திரேலிய சொகுசு கப்பலில் 80 பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 


சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுதும் காட்டுத்தீயாய் பரவி பேரிழப்புகளை ஏற்படுத்திவருகிறது. உலகளவில் சுமார் 13 லட்சம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 71 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவிற்கு மருந்து இல்லாததால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகள், சமூக விலகலை உறுதி செய்வதற்காக ஊரடங்கை அமல்படுத்திவிட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. 

Latest Videos

விமான போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சரக்கு மற்றும் பயணிகள் கப்பல்கள் எல்லாம் எங்கெங்கு இருந்தனவோ அங்கேயே நங்கூரம் போட்டி நிறுத்தப்பட்டிருக்கின்றன. 

இந்நிலையில், தெற்கு அட்லாண்டிக் கடலில் உருகுவே நாட்டில் நிலை நிறுத்தப்பட்டிருந்த ஆஸ்திரேலிய சொகுசு கப்பலில் 200க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அந்த கப்பலில் இருந்த 6 பேருக்கு திடீரென உடல்நிலை ரொம்ப மோசமானதால் அவர்கள் உருகுவேவின் மாண்ட்வீடியோ நகரில் உள்ள மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டபோது, அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த கப்பலில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

அந்த பரிசோதனையில் 81 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியிருப்பதாக உருகுவே நாட்டின் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  90 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை எனவும் 45 பேருக்கு கொரோனா இல்லை எனவும் உருகுவே சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. ஆரம்பத்திலேயே உடல்நல குறைவுடன் அனுமதிக்கப்பட்ட 6 பேரின் நிலை மோசமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து நாடுகளிலும் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் கப்பலில் இருப்பவர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும்  என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம்.
 

click me!