ஈழத் தமிழர் பிரச்சினையை கையில் எடுக்கும் அண்ணாமலை! பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பேச்சு!

By SG Balan  |  First Published Jun 27, 2023, 7:48 PM IST

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கை உள்நாட்டுப் போர் மற்றும் ஈழத் தமிழர் பிரச்சினைகள் பற்றி விரிவாகப் பேசி இருக்கிறார்.


லண்டன் சென்றுள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பிரிட்டன் நாடாளுமன்றத்தில் உள்ள ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசி இருக்கிறார். இந்த நிகழ்ச்சியை பிரிட்டன் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியின் ஜான் மெக்டனல், ஸ்காட்டிஷ் தேசிய கட்சியின் மார்ட்டின் டே, பிரிட்டன் அரசின் தனி ஆலோசகர் ஜான் மன், நாடாளுமன்ற உறுப்பினர் தெரேசா வில்லியர்ஸ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர். பிரிட்டன் தமிழ்ச் சங்கம் சார்பில் ஷர்மிளாவும் பிரிட்டிஷ் தமிழ் மன்றம் சார்பில் பொதுச் செயலாளர் ரவிக்குமாரும் கலந்துகொண்டார்கள்.

Latest Videos

undefined

இந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் உள்ள உறவு பற்றி விரிவாகப் பேசினார். குறிப்பாக, இலங்கையில் உள்நாட்டுப் போரினால் ஈழத் தமிழர்கள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், பிரதமர் மோடி ஈழத்தமிழர்கள் மறுவாழ்வுக்காக எடுத்த நடவடிக்கைகளையும் எடுத்துக் கூறினார்.

பிரிட்டன் நாடாளுமன்ற உரையில் அண்ணாமலை பேசியதாவது:
 
இந்தியாவும் இலங்கையும் மிகத் தொன்மையான நாகரிகத் தொடர்பு உடையவை. 1400 வருடங்களுக்கு முந்தைய தமிழ் இலக்கியமான பட்டினப்பாலையில், ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும் தமிழகத்தின் பூம்புகார் துறைமுகத்தில் குவிந்து கிடந்தன என்று குறிப்பிடப்பட்டிருப்பதில் இருந்து, இந்திய இலங்கை வாணிபத் தொடர்பு குறித்து அறியலாம். அது மட்டுமல்ல, சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பாக, 9 - 10 ஆம் நூற்றாண்டுகளில், ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகிய தமிழ் மன்னர்களின் இலங்கைத் தொடர்பு வரலாற்றில் இடம் பிடித்தவை.
 
இந்தியாவின் ஆன்மீகத் துறவியான சுவாமி விவேகானந்தர், தனது புகழ்பெற்ற சிகாகோ பயணத்திற்கு பிறகு, நேரடியாக இலங்கைக்குத்தான் முதலில் பயணம் செய்தார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்குச் சென்று உரையாற்றி, அதன் பின்னரே அவர் இந்தியாவுக்கு பயணப்பட்டார்.
 
இலங்கையில் நிலவும் பிரச்சினை, ஒரு வருட அல்லது பத்து வருடப் பிரச்சினை அல்ல. சுமார் 80 - 85 வருடங்களாகத் தொடரும் பிரச்சினை. இலங்கை சுதந்திர நாடாகிய பிறகு, இலங்கையில் வடகிழக்கு பகுதி மற்றும் மத்தியப் பகுதியில் வசிக்கும் தமிழ் மக்கள், உறுப்பினர் பிரதிநிதித்துவம், அரசுப் பணிகள், சேவைகள், நீதித்துறை, வணிகம் போன்றவற்றில் தகுந்த விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் பெறவில்லை. 1948 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கையின் புதிய அரசியலமைப்புத் திருத்தம், அங்கு வசித்த தமிழர்களை வீடற்றவர்களாகவும், நிலமற்றவர்களாகவும் ஆக்கியது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அமரர். லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் இந்தியாவின் பிரதமரான பின்னரே, அதற்கான தீர்வு குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

1987 ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டுப் போரில் தமிழர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். அதன் பிறகு ஏற்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்ட நடவடிக்கைகள், இது வரை முழுவதுமாக நிறைவேற்றப்படவில்லை. 2009 ஆம் ஆண்டு, வரலாற்றிலேயே மிகத் துயரமான ஆண்டாக அமைந்தது. அதற்கு முக்கியப் பொறுப்பு, அன்றைய காங்கிரஸ் அரசு. தனது கடமைகளிலிருந்தும், இலங்கைப் போரைத் தடுக்க வேண்டிய பொறுப்புகளிலிருந்தும் தவறியது காங்கிரஸ் கட்சி செய்த மன்னிக்க முடியாத தவறு.

2014 ஆம் ஆண்டிற்குப் பிறகே, மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள், இலங்கைத் தமிழ் மக்கள் வாழ்வில் புதிய நம்பிக்கையை உருவாக்கினார். இந்தியாவும் இலங்கையும் நாகரிக இரட்டை நாடுகள் என்று கூறிய முதல் இந்தியத் தலைவர் நமது பிரதமர் மோடி அவர்கள்தான்.  யார் பெரிய நாடு யார் சிறிய நாடு என்ற கேள்வியே எழவில்லை. இலங்கையின் மீது பெரிய அண்டை நாடு என்ற இந்தியாவின் அதிகாரத்தையும் திணிக்க முயற்சிக்கவில்லை. இந்தியாவும் இலங்கையும் ஒரே தாய் வயிற்றில் பிறந்த சகோதரிகள் என்று வெளிப்படையாக அறிவித்தார் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள். எனவே, இலங்கையின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய வரலாற்றுக் கடமை இந்தியாவுக்கு உள்ளது என்பதை மனமார உணர்ந்திருந்தார். குறிப்பாக, இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளில் உள்ள தமிழர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி வளமாக வாழ்ந்தார்களோ அவர்களை மீண்டும் அந்த நிலைக்கு உயர்த்த வேண்டும் என்று விரும்பினார். அதற்கான தொடர் பணிகளையும் இலங்கை அரசோடு இணைந்து மேற்கொள்ளத் தொடங்கினார்.

கடந்த 9 ஆண்டுகளில், இலங்கையில், தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு இந்திய அரசு செய்துள்ள பணிகள் ஏராளம். ஆண்டுகள், இலங்கையின் வடகிழக்கு பகுதி மற்றும் மத்திய பகுதிகளில், இந்திய அரசு தமிழ் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொ டுத்திருக்கிறது. தமிழ்க் கலாச்சாரம் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு, இன்னும் பல தலைமுறைகளுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், யாழ்ப்பாண கலாச்சார மையத்தைப் புனரமைத்துக் கொடுத்திருக்கிறது பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான அரசு. இலங்கைத் தலைநகர் கொழும்புடன், யாழ்ப்பாணத்தை இணைக்கும் ரயில் போக்குவரத்து அமைத்துக் கொடுத்திருக்கிறது பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான அரசு.
 
தமிழகத்துடன் கலாச்சார ரீதியாக தொடர்புள்ள இலங்கையின் வடகிழக்கு பகுதிகளுக்கும்  தமிழகத்துக்கும் இடையே நேரடி போக்குவரத்துத் தொடர்பு இல்லாமல் இருந்தது. இந்தியா மற்றும் இலங்கை அரசின் கூட்டுமுயற்சியில் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் புனரமைக்கப்பட்டு, தற்போது, சென்னை பலாலி விமான நிலையம் இடையே தினசரி விமான சேவை நடைபெறுகிறது. இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்துக்கும், தமிழகத்துக்கும் உள்ள கலாச்சாரத் தொடர்புகளைப் புதுப்பிக்க, காரைக்கால் காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கவிருக்கிறது.


 
சமீபத்தில் பொருளாதாரப் பாதிப்படைந்த இலங்கைக்கு, 3.8 பில்லியன் டாலர் அளவிலான கடனுதவி, 40000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் பெட்ரோல், காய்கறிகள், உணவுப் பொருள்கள் என உதவி, இலங்கையை சரிவிலிருந்து காப்பாற்றியது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களது அரசு.
 
இலங்கையில் வடகிழக்கு பகுதியில் உள்ள புனித பூமியான ஈழத்திற்குச் செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஈழத்தில் உள்ளதைப் போல மிகவும்  செழுமையான, துடிப்பான, அறிவாற்றல் வேரூன்றிய ஒரு கலாச்சாரத்தை வேறு எங்கும் கண்டதில்லை என்றே சொல்லுவேன். இத்தகைய செழுமை வாய்ந்த கலாச்சாரத்தைக் கொண்ட ஈழ மண்ணிற்குச் சென்றது எனது பாக்கியம்.
 
இலங்கை வடகிழக்குப் பகுதிக்கு சென்றிருந்தபோது, நான் கவனித்த கவலைக்குரிய விஷயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். கடந்த 15 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், அங்கு கல்வித் தரம் மிகவும் குறைந்திருக்கிறது. இலங்கை தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெறும் அளவுக்கு, வடகிழக்குப் பகுதிகளில் கல்வித் தரம் இல்லை. எந்தவொரு வளர்ச்சிக்கும், தகுதியான, திறமையான படித்த இளைஞர்கள் தேவை. ஆனால், தற்போதைய கல்வித் தரம், அத்தகைய இளைஞர்களை உருவாக்குமா என்ற கேள்வி எழுகிறது.
 
இரண்டாவதாக, ஈழத்தில் குறைந்து கொண்டிருக்கும் இந்து சமய மக்கள்தொகை. மிகவும் அபாயகரமான விகிதத்தில், இந்து சமயத்தைப் பின்பற்றும் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது.   
 
இந்த புவியியல் மாற்றம், இலங்கை வடகிழக்கு பகுதியின் கலாச்சாரத்தைப் பாதிக்கும். பாதகமான விளைவாகும். இந்த மாற்றங்களை தடுக்க இலங்கை அரசுடன் இணைந்து மாண்புமிகு பாரத பிரதமர் முனைப்புடன் பணியாற்றிவருகிறார்.
 
மூன்றாவதாக, தமிழர்களின் . தொல்லியல் தளங்கள், தமிழர்களின் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் அடையாளத்தை வெளிப்படுத்துபவை. பெருமளவில், பௌத்த தொல்லியல் தளங்கள் உருவாகி வருவதால், பிற்காலத்தில், தமிழர்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையே அமைதியில் விரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது.
 
நான்காவதாக, இலங்கை இராணுவம், தமிழர் பகுதியில் வளமான விவசாய நிலங்களை ஆக்கிரமித்து இராணுவ முகாம்கள் அமைத்திருக்கின்றன. தமிழர்களின் பொருளாதார நிலை இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறது.
 
ஐந்தாவதாக, இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமை இல்லாமை. அனைத்துக் கட்சிகளும் வெவ்வேறு தீர்வுகளை முன்வைக்கின்றன. ஆனால், அனைவரும் ஒற்றுமையாக் கூடி, பொதுவான, நிலையான தீர்வு ஒன்றை முன்னிறுத்துவதில்லை.
 
இந்த பிரச்சினைகள் அனைத்தும் குறித்து, இலங்கைப் பிரதமருக்குக் கொண்டு செல்லும் முயற்சியின் விளைவாக, இரண்டு வாரங்களுக்கு முன்பாக, மத்திய மலையகப் பகுதியிலிருந்து திரு. செந்தில் தொண்டைமான். என்ற ஒரு தமிழரை, புதிய ஆளுநராக நியமித்துள்ளனர். அவரது நியமனம் தமிழ் மக்களின் பெரும்பாலான முக்கிய பிரச்சினைகளை தீர்க்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இலங்கையின் வடகிழக்கு பகுதியின் கலாச்சாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கமும் நமது பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசுக்கு இருக்கிறது. 1400 ஆண்டுகள் பழமையான, தேவாரம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களில் பாடப்பட்ட திருக்கேதீஸ்வரம் கோவிலைப் புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களது தலைமையிலான நமது மத்திய  அரசு உதவியது. இதனால், தமிழ்நாட்டிலிருந்து பல தமிழர்கள், திருக்கேதீஸ்வரம் கோவிலுக்குச் செல்லத் தொடங்கியிருக்கின்றனர்.

இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம் தனித்தன்மை வாய்ந்தது. மொத்தம் 225 பாராளுமன்ற உறுப்பினர்களில், 196 பேர் பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 29 உறுப்பினர்கள் தேசியப் பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவர். ஒரு கட்சி பெறும் வாக்கு வீதத்தின் அடிப்படையில் மக்களால் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் கூட தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்குச் செல்ல முடியும். எனவே, இலங்கையின் எந்த அரசியல்வாதியையும் புறக்கணிக்க முடியாது. கடந்த 30 - 40 ஆண்டுகளில் ஒவ்வொரு இலங்கை அரசியல் தலைவரும், இலங்கை அரசியலில் கணிசமான அளவு செல்வாக்கு செலுத்தியுள்ளனர். எனவே அங்குள்ள எதிர்க் கட்சியினர், முன்னாள் தலைவர்கள் என ஒவ்வொரு அரசியல் தலைவர்களையும் நாம் கலந்துரையாடி நம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும்          .
 
இலங்கை வடகிழக்கு யாழ்ப்பாணப் பகுதிக்கும், மலையக பகுதிக்கும் சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி அவர்கள். இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை வழங்கும் 13 ஆம் சட்டத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே இலங்கைப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என்று பிரதமர் மோடி அவர்கள், தனது இலங்கைப் பயணத்தின்போது வலியுறுத்தினார். மாண்புமிகு வெளியுறவுத் துறை அமைச்சர் திரு ஜெய்சங்கர் அவர்களும், இந்த ஆண்டு இலங்கைப் பயணத்தின் போது, இலங்கை பிரதமரிடம், 13 வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார். தமிழக பாஜக சார்பிலும், இலங்கையில் நிரந்தர தீர்வுக்காக மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
 
உலகளாவிய அரசியல் மற்றும் சீனா அரசு, இலங்கையில் மேற்கொண்டுள்ள முதலீடுகள், கடன் உதவி உள்ளிட்டவை, இலங்கைத் தமிழ் மக்களுக்கான தீர்வைத் தாமதப்படுத்தலாம். இலங்கை, உலக நாடுகளின் அதிகாரப் போட்டியில் பலியாகி விடக்கூடாது என்பதிலும் பாரத பிரதமர் மோடி அவர்கள் மிகவும் கவனமாக இருக்கிறார். நாகரீக இரட்டையராக இலங்கையின் தமிழ் சகோதர சகோதரிகளுடன் நிற்பது இந்தியாவின் தார்மீக பொறுப்பு. இலங்கையில் வாழும் நம் தமிழ்ச் சகோதரர்களின், தற்போது, மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் ஆட்சியில் தீர்க்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் எப்போதுமே தீர்க்க முடியாது என்பதையும் நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம்.

click me!