வெற்றி பெறுவதற்கு முன்னரே இந்தியாவுக்கு தலைவலி கொடுத்த ஜோ பிடன்...!! காஷ்மீர் விவகாரத்தில் கருத்து..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 27, 2020, 3:52 PM IST
Highlights

டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, இந்தியாவுக்கு  ஆதரவாகவும், அனுசரணையாகவும் நடந்து வரும் நிலையில்  அடுத்த ஜனாதிபதியாக வெற்றிபெற வாய்ப்புள்ளதாக கருதப்படும் ஜோ பிடன் இந்தியாவை  எச்சரிக்கும் வகையில் விமர்சித்துள்ளார். 

வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை எதிர்த்துப் போட்டியிடும் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் இந்தியாவுக்கு எதிராக கருத்து கூறியுள்ளார். இந்தியா- சீனா இடையே கிழக்கு லடாக் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, இந்தியாவுக்கு  ஆதரவாகவும், அனுசரணையாகவும் நடந்து வரும் நிலையில்  அடுத்த ஜனாதிபதியாக வெற்றிபெற வாய்ப்புள்ளதாக கருதப்படும் ஜோ பிடன் இந்தியாவை  எச்சரிக்கும் வகையில் விமர்சித்துள்ளார். அதாவது, ஜோ பிடனின் பிரச்சார இணையதளத்தில் முஸ்லிம் அமெரிக்க சமூகத்திற்கான நிகழ்ச்சி நிரல் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது, அதில் இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம், என்.ஆர்.சி போன்ற படிகள் இந்திய ஜனநாயகத்தின் பன்முக கலாச்சாரம் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றின் நீண்ட பாரம்பரியத்திற்கு எதிரானது என கூறப்பட்டுள்ளது. இந்த கட்டுரை ஜோ பிடன் சார்பில் வெளியிடப்பட்டள்ளதால் இது அவரின் கருத்தாகவே கருதப்படுகிறது. மேலும் காஷ்மீரின் உரிமைகளை திருப்பித்தர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு எடுக்க வேண்டும், 

காஷ்மீரில் கருத்து வேறுபாடுகளை அடக்குவதற்கும் ஆர்ப்பாட்டங்களை தடுப்பதற்கும் இணையதளத்தை துண்டிப்பதால் ஜனநாயகம் பலவீனமடைகிறது. குறிப்பாக அசாம் மாநிலத்தில் என்.ஆர்.சியை நடைமுறைப்படுத்தி குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வருவதற்கான இந்திய அரசின் நடவடிக்கையால் நான் மிகுந்த ஏமாற்றம் அடைகிறேன். அதேநேரத்தில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் காஷ்மீர் விவகாரம் ஒரு உள்நாட்டு விவகாரம் எனக்கூறி வெளி அமைப்புகளையும் பிற  நாடுகளையும் இந்தியா புறக்கணிக்கிறது எனவும் அவர் அதில் குற்றம் சாட்டியுள்ளார். அதேபோல் எல்லை தாண்டிய பயங்கரவாதம், காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல், பாகிஸ்தானில் இந்து சிறுபான்மையினரின் வலி, இந்தோ பசிபிக் பகுதியில் சீனாவுடனான மோதல்கள், உலகப் பாதுகாப்பு, பயங்கரவாதம் மற்றும் பொருளாதாரம் போன்ற அனைத்து பிரச்சினைகளையும் தான் நன்கு புரிந்து வைத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். 

மொத்தத்தில் காஷ்மீர் மற்றும் இந்தியா குறித்து இந்தியாவுக்கு எதிரான மனநிலையில் உள்ள சில அமெரிக்க அதிகாரிகள் இந்த தகவலை பிடனுக்கு அளித்திருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் ஜோ பிடனின் பிரச்சாரத்தில் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ள இக்கருத்துக்களுக்கு இந்து அமெரிக்கர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் ஜோ பிடன் இக்கட்டுரையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால்  இந்து அமெரிக்கர்களின் கோரிக்கைக்கு பிடன் தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை. அமெரிக்காவின் ஜனாதிபதியாக வருவதற்கு முன்னரே ஜோ பிடன் இந்தியாவிற்கு எதிராக கருத்து கூறி இருப்பது இந்தியாவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  பராக் ஒபாமாவின் பதவிக்காலத்தில் துணைத் தலைவராக இருந்த பிடென் இந்தியாவின் நண்பராகக் காணப்பட்டதாக பிடனின் ஆதரவாளர் அஜய் ஜெயின் படோரியா செய்தி நிறுவனமான பி.டி.ஐ-யிடம் தெரிவித்துள்ளார். இந்திய-அமெரிக்கர்களிடையே அவருக்கு ஒத்த அலைவரிசை உள்ளதாகவும், இந்தோ-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திலும் அவர் முக்கிய பங்கு வகித்தார் எனவும், பிடென் தனது இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்தவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

click me!