சுமார் 250 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க பொருட்களை வாங்குவதாக சீனா ஏற்கனவே உறுதி அளித்துள்ளது எனக் கூறினார் .
கொரோனா வைரசை காரணம் காட்டி சீனா அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை முறையாக பின்பற்றாவிட்டால் ஒட்டுமொத்த ஒப்பந்தத்தையும் முடித்துவிடுவேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்திருந்த நிலையில், சீனா மற்றும் அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் முதற்கட்ட வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் , அடுத்த இரண்டு ஆண்டுகளில் 2017 ஆம் ஆண்டை விட கூடுதலாக சுமார் 200 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க பொருட்களை இறக்குமதி செய்து கொள்ள சீனா ஒப்புக் கொண்டுள்ளது . இந்த ஒப்பந்தத்திற்குப் பின்னர் அமெரிக்கா சீனா இடையே ஒரளவுக்கு சுமுகமான உறவு ஏற்பட்டு இருந்த நிலையில் , திடீரென வீசிய கொரோனா அலையால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மீண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதற்கு சீனாதான் காரணம் இந்த வைரஸ் சீனாவில் பரவிய போது ஆரம்பத்திலேயே அது உலக நாடுகளை எச்சரிக்க தவறிவிட்டது, உலக நாடுகளை தவறாக வழிநடத்தி ஆபத்தில் சிக்க வைத்து விட்டது சீனா என அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டி வருகிறார் . அதேபோல் சீனாவின் ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் இந்த வைரஸ் கசிந்தது என அதிபர் டிரம்புடன் சேர்ந்து அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோவும் தொடர்ந்து சீனா மீது குற்றஞ்சாட்டி வருகிறார் இந்நிலையில் அமெரிக்கா சீனாவுக்கு இடையே பனிப் போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது . முன்னதாக சீனாவை எச்சரித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் , அமெரிக்காவுடன் செய்து கொண்ட வர்த்தக ஒப்பந்தத்தை முறையாக பின்பற்ற மறுத்தால் சீனா உடனான அனைத்து ஒப்பந்தத்தையும் முடித்துக் கொள்வோம் என ட்ரம்ப் சீனாவை கடுமையாக எச்சரித்துள்ளார் .
தொடர் ஊரடங்கால் அமெரிக்கா மிகக் கடுமையான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில் , பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு அமெரிக்கா ஆளாகி உள்ளது, இந்நிலையில் அடுத்த வாரம் சீனா அமெரிக்காவுக்கு இடையேயான வர்த்தகம் தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன , சீன துணை பிரதமர் லியு மற்றும் அமெரிக்க தரப்பில் லைட்ஹைசர் ஆகியோர் இடையே தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன . இதற்கிடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டவுன்ஹாலில் தொழிலதிபர்களுடன் நடந்த நிகழ்ச்சியில் ஒரு தொழிலதிபரின் கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப் , சுமார் 250 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க பொருட்களை வாங்குவதாக சீனா ஏற்கனவே உறுதி அளித்துள்ளது எனக் கூறினார் .
அதேபோல் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து அதிபர் டிரம்ப் கடந்த ஜனவரியில் சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி லீவ் மற்றும் லைட்ஹைசர் இந்த ஒப்பந்தத்தைப் பற்றி அதிகாரபூர்வமாக முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் . இந்த ஒப்பந்தம் தொடர்பாக ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் லியு- லைட்ஹைசர் இருவரும் பேச்சுவார்த்தை நடத்துவர், அதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை அடுத்த வாரம் அட்டவணை செய்யப்பட்டுள்ளது .இந்த வர்த்தக ஒப்பந்தம் எவ்வாறு முன்னேறுகிறது என்பதைப் பொறுத்துத்தான் இதுகுறித்து நாம் அதுபற்றி கருத்து கூற முடியும் ஆனால் இந்த நெருக்கடியான நேரத்தில் அடிவானத்தில் ஒளி கீற்றுத் தெரிகிறது எனட்ரம்ப் கூறியுள்ளார் . அமெரிக்கா சீனாவுக்கு இடையே நடைபெற உள்ள இந்த வர்த்தக பேச்சுவார்த்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது , இதில் அமெரிக்காவின் எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால் இரு நாட்டிற்கும் இடையேயான உரசல் நிச்சயம் மோதலுக்கு வழி வகுக்கும் என சர்வதேச அரசியல் நோக்ககர்கள் தெரிவிக்கின்றனர்.