Humaid Robot : உலக அளவில் புகழ்பெற்ற சில்லறை வர்த்தக நிறுவனமான அமேசான், அதன் செயல்பாடுகளை தானியங்குபடுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் உள்ள தனது கிடங்கு ஒன்றில் மனித உருவ ரோபோக்களை (Humaid Robots) சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இரண்டு கால் கொண்ட இந்த ரோபோகள், பொருட்களைப் பிடித்து தூக்கும் அளவிற்கு திறன்வாய்ந்தது என்று அமேசான் கூறியதாக கார்டியன் என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த கிடங்கில் உள்ள வெற்று பெட்டிகளை இடமாற்றம் செய்து இந்த சோதனை நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இந்த புதிய வெளியீடு, கிட்டத்தட்ட 1.5 மில்லியன் பணியாளர்களைக் கொண்ட ஒரு நிறுவனத்தின் பணியாளர்களிடம் ரோபோ ஏற்படுத்தும் தாக்கம் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது. ஆனால், அமேசான் ரோபோட்டிக்ஸின் தலைமை தொழில்நுட்ப வல்லுநரான டை பிராடி, இது சில தேவையற்ற வேலைகளை குறைத்தாலும், மனிதர்களுக்கு வேறு பல வேலைகள் உள்ளன என்று கூறினார்.
இருப்பினும், அமேசான் நிறுவனம் "தங்கள் தொழிலாளர்களை பல ஆண்டுகளாக ரோபோக்கள் போல நடத்துகிறது" என்று ஒரு தொழிலாளர் சங்கம் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. நாங்கள் ஏற்கனவே நூற்றுக்கணக்கான வேலைகள், காணாமல் போவதை பார்த்திருக்கிறோம்" என்று UK தொழிற்சங்க GMB இன் அமைப்பாளரான ஸ்டூவர்ட் ரிச்சர்ட்ஸ், மேற்கோளிட்டு கூறியதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ரோபோவை ஓரிகானில் உள்ள கோர்வாலிஸில் உள்ள ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ளது. சக்கரங்களை விட, இந்த டிஜிட் என்ற Humanoid ரோபோக்கள் கால்களில் நடக்கிறது. இது 5 அடி 9 அங்குலம் உயரமும் 65 கிலோ எடையும் கொண்டது. இந்த ரோபோக்களால் பின்னோக்கி, முன்னோக்கி மற்றும் பக்கவாட்டாக நடக்க முடியும், மேலும் குனிந்து செல்லவும் முடியும். இது பொருட்களை எடுத்து நகர்த்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.