
Ajit Doval Meets Vladimir Putin: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியப் பொருட்கள் மீது 50% வரி விதித்து உள்ளார். அமெரிக்க பொருட்களுக்கு இந்தியாவில் அதிக வரி விதிக்கப்படுவதால் இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இராணுவ தளவாடங்களை அதிக அளவில் வாங்கி உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு இந்தியா உதவி செய்கிறது என்றும் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆட்டம் போடும் டிரம்ப்; பிரதமர் மோடி பதிலடி
டிரம்பின் வரி விதிப்புக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ''அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை நியாயமற்றது, சரியற்றது மற்றும் காரணமற்றது. நாட்டின் நலன்களைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்'' என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பிரதமர் மோடியும் டிரம்புக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்தார். ''எங்கள் விவசாயிகளின் நலன்களில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். அதற்காக எவ்வளவு பெரிய விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்'' என்று மோடி கூறியுள்ளார்.
புதினுடன் அஜித் தோவல் சந்திப்பு
இந்தியா, அமெரிக்கா இடையே மோதல் வலுத்துள்ள நிலையில், ரஷ்யாவுடனான தனது உறவை இந்தியா மேலும் வலுப்படுத்த தயாராக உள்ளது. இந்நிலையில், டிரம்பின் வரி விதிப்பு அறிவிப்பு வெளியான மறுநாளே (அதாவது நேற்று) இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசியுள்ளார்.
சந்திப்புக்கு என்ன காரணம்?
ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு, நீண்டகால நட்புறவு மற்றும் பரஸ்பர நலன்களின் அடிப்படையில் இந்ச சந்திப்பு அமைந்துள்ளது. இந்தியா, ரஷ்யா உறவில் அமெரிக்காவின் தலையீட்டை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்பதை புதின், அஜித் தோவல் சந்திப்பு டிரம்புக்கு எடுத்துரைத்துள்ளது. மேலும் ரஷ்ய அதிபர் புதின் விரைவில் இந்தியா வர உள்ள நிலையில், அஜித் தோவல் புதின் சந்திப்பு அதற்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது.
இந்தியா யாருக்கும் அடிபணியாது
புதின் இந்தியாவுக்கு வருகை தரும் தேதிகளை இறுதி செய்வதற்காகவும், இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காகவும் இந்த சந்திப்பு நடந்துள்ளது. மேலும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எந்தவொரு ஒற்றை நாட்டையும் சார்ந்து இருக்காது, மாறாக அதன் சொந்த நலன்களின் அடிப்படையிலேயே அமையும் என்பதை புதின், அஜித் தோவல் சந்திப்பு அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்துள்ளது.