
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் கடந்த வார இறுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,200-ஐ தாண்டி, அந்நாட்டின் வரலாற்றில் மிக மோசமான பேரழிவாக மாறியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,640-ஐ தாண்டியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய மலைப் பகுதியில் 6.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில், குனார் மாகாணத்தில் மட்டும் 2,205 பேர் உயிரிழந்ததாக தாலிபன் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அண்டை மாகாணங்களான நங்கர்ஹார் மற்றும் லக்மானில் 12 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மீட்புப் பணியில் தொய்வு
பாதிக்கப்பட்ட மலைப்பகுதிகளை அடைவதில் உள்ள சிரமங்கள் காரணமாக மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏற்பட்ட தொடர் நிலச்சரிவுகள், ஏற்கனவே மோசமான நிலையில் உள்ள சாலைகளை அடைத்துவிட்டன. பல்வேறு நாடுகள் நிவாரண உதவிகளை அனுப்பி வந்தாலும், பல கிராமங்களில் மக்கள் திறந்தவெளியில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களுக்கு உணவு கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை:
உலக சுகாதார அமைப்பு (WHO), உள்ளூர் மருத்துவமனைகள் கடும் நெருக்கடியில் இருப்பதாகவும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருத்துவப் பொருட்கள், மருந்துகள் மற்றும் ஊழியர்களுக்குத் தட்டுப்பாடு இருப்பதாகவும் எச்சரித்துள்ளது. மனிதாபிமான உதவிகளுக்காக 4 மில்லியன் டாலர் நிதி தேவை என்றும் உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
நெருக்கடி மேல் நெருக்கடி:
ஏற்கனவே கடுமையான வறுமை, வறட்சி, மற்றும் அண்டை நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான அகதிகள் திரும்பியதால் ஆப்கானிஸ்தான் பல்வேறு மனிதாபிமான நெருக்கடிகளில் சிக்கித் தவித்து வருகிறது. இந்த நிலையில், நிலநடுக்கம் மேலும் ஒரு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பின் தலைவர் பிலிப்போ கிராண்டி, 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் உதவிக்கரம்:
இந்த கடினமான சூழ்நிலையில், இந்தியா தனது மனிதாபிமான உதவிகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சகம், முதற்கட்டமாக 15 டன் உணவுப் பொருட்களை காபூல் வழியாக குனார் பகுதிக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது. தொடர்ந்து நிவாரணப் பொருட்கள் மற்றும் உதவிகள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.