ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகள் வெளியேறியதை அடுத்து நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.
ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகள் வெளியேறியதை அடுத்து நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.
கடந்த இரண்டு மாதங்களாகவே உலக நாடுகளை பல்வேறு கோணங்களில் யோசிக்க வைத்த ஆப்கானிஸ்தானில் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக கோலோச்சி நின்ற அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் நேட்டோ படை வெளியேறியதை அடுத்து ஒரே வாரத்தில் ஆப்கன் முழுவதையும் கைப்பற்றினர் தாலிபான்கள். ஆனால், அதன் பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்வுகள் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தாலிபான்களின் காட்டாட்சியில் வாழவே முடியாது அங்குள்ள மக்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக ஓட்டம் பிடித்தனர். ஷரியத் சட்டத்தை நடைமுறைப்படுத்திய தாலிபான்கள், பெண்கள், குழந்தைகளுக்கு பல்வேறு கொடிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். நடுரோட்டில் தூக்கிலிடுவது, பாடகரை சுட்டுக்கொல்வது என தாலிபான்களின் வெறியாட்டம் தொடர்ந்து கொண்டுள்ளது. தாலிபான் கட்டுப்பாட்டில் வந்த ஆப்கானிஸ்தான், பயங்கரவாதிகளின் புகழிடமாய் மாறிவிடும் என்பதே உலகநாடுகளின் கவலையாகும்.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்க படைகள் வெளியேறிக்கொண்டிருந்த போதே அங்குள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகள் காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தினர். இந்தநிலையில் குந்தூஸ் மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்றில் மிகப்பெரிய குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றுள்ளது.
வெள்ளிக்கிழமையில் ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது, உடல் முழுவதும் வெடிகுண்டை கட்டிக்கொண்டு மசூதிக்குள் நுழைந்த பயங்கரவாதி, அதனை வெடிக்கச் செய்தான். இந்த கொடூர தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயம்டைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் ஆப்கானிஸ்தானில் கொடூர தக்குதலை நடத்தும் சன்னி பிரிவு முஸ்லீம்களான ஐ.எஸ். பயங்கரவாதிகள் தான் இந்த மனித வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்தியிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.