
ஒரு வார மோதலுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தற்காலிக சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தாலிபன் படையின் தாக்குதலின்போது தப்பி ஓடிய பாகிஸ்தான் வீரர்களை கேலி செய்யும் பதிவுகள் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி உள்ளன.
ஆப்கானிஸ்தான் தாலிபன் படையினர் தாங்கள் கைப்பற்றிய பாகிஸ்தான் டாங்கிகளுடன் அணிவகுத்து நின்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. மேலும், பாகிஸ்தான் வீரர்கள் தங்கள் நிலைகளை விட்டு தப்பி ஓடும்போது விட்டுச் சென்றதாகக் கூறப்படும் ராணுவ பேண்ட்களை தாலிபன் படையினர் காட்சிப்படுத்தும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன.
1971 ஆம் ஆண்டு இந்தியாவுடனான போரின்போது 93,000 பாகிஸ்தான் வீரர்கள் சரணடைந்த நிகழ்வை நினைவுபடுத்தும் வகையில், ‘93,000 pants ceremony 2.0’ என்று ஆப்கன் ஆதரவாளர்கள் பலர் பதிவிட்டு வருகின்றனர்.
சமூக ஊடகப் பயனர்கள் இந்தச் சம்பவத்தை கொண்டாடி வரும் நிலையில், '93,000' என்ற எண் ‘எக்ஸ்’ தளத்தில் பிரபலமடைந்து வருகிறது. 1971 டிசம்பரில் பாகிஸ்தான் லெப்டினன்ட் ஜெனரல் அமீர் அப்துல்லா நியாசி, இந்திய லெப்டினன்ட் ஜெனரல் ஜக்ஜித் சிங் அரோரா முன்னிலையில் சரணடையும் ஆவணத்தில் கையெழுத்திட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படமும் மீண்டும் பகிரப்பட்டு வருகிறது.
13 நாட்கள் நீடித்த 1971 போர் வங்கதேச விடுதலைக்கு வழி வகுத்தது. அந்தப் போரில் பாகிஸ்தான் இராணுவத் தலைவர் 93,000 வீரர்களுடன் இந்திய இராணுவம் மற்றும் வங்கதேசத்தின் முக்தி பாஹினி கூட்டுப் படைகளிடம் சரணடைந்தார். லெப்டினன்ட் ஜெனரல் நியாசி தனது அடையாளச் சின்னங்கள் மற்றும் துப்பாக்கியைக் கழற்றி வைத்துவிட்டு சரணடையும் ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
தற்போது, ஆப்கானிஸ்தான் படையினர் பாகிஸ்தான் வீரர்களின் பேன்ட்களைக் காட்சிப்படுத்தியதைக் கண்ட பலர், இது பாகிஸ்தான் மீண்டும் சரணடைந்துவிட்டதன் அடையாளம் எனக் கூறியுள்ளனர். பாகிஸ்தான் வீரர்கள் தங்கள் இராணுவ நிலைகளைக் கைவிட்டு ஓடியபோது இவை விட்டுச் செல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
காபூலைச் சேர்ந்த ஃபசல் ஆப்கான் தனது 'எக்ஸ்' பதிவில், "1971: இந்தியர்களிடம் சரணடைந்தனர். 2025: ஆப்கானியர்களிடம் சரணடைந்தனர். நீண்ட காலமாகியும், 93,000 குழுவில் எதுவும் மாறவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், "ஒரு நாள் ஆப்கானிஸ்தான் 93,000 என்ற இந்தியாவின் சாதனையை முறியடிக்கும்" என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
எழுத்தாளரும் ராணுவப் பின்னணி கொண்டவருமான கன்வால் ஜீத் சிங் தில்லான், 1971ஆம் ஆண்டு பாகிஸ்தான் சரணடையும் படத்தைப் பகிர்ந்து, "93,000 எப்போதும் எனக்குப் பிடித்த எண்" என்று பதிவிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் வக்கீல் முபாரிஸும் பாகிஸ்தானைக் கேலி செய்துள்ளார். மற்றொரு பயனர், "93,000 குழு மீண்டும் வரலாறு படைக்கிறது… அவர்கள் பின்பற்றும் ஒரே பாரம்பரியம் - சரணடைவதுதான்" என்று கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.