
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியா குறித்துப் பேசியபோது, "ஒவ்வொரு வருடமும் ஒரு புதிய பிரதமர்" வருவதாக குழப்பமான கருத்தை வெளியிட்டுள்ளார். இந்தியாவை பாகிஸ்தானுடன் குழப்பிக்கொண்டு இவ்வாறு பேசியிருக்கிறார் என சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
புதன்கிழமை வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுடன் பேசிய டிரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சிறந்த மனிதர் என்றும், நிரூபிக்கப்பட்ட தலைவர் என்றும் புகழ்ந்தார். மேலும், ரஷ்ய எண்ணெயை வாங்குவதை இந்தியா நிறுத்திவிடும் என்று மோடி தனக்கு உறுதியளித்தார் எனவும் டிரம்ப் கூறினார்.
மோடியைப் புகழ்ந்து பேசிய சிறிது நேரத்திலேயே, டிரம்ப் குழப்பமான கருத்தை வெளியிட்டார். "மோடி ஒரு சிறந்த மனிதர். அவர் டிரம்பை விரும்புகிறார்," என்று கூறிய டிரம்ப், உடனே, "விரும்புகிறார் என்று சொன்னதை நீங்கள் வேறுவிதமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அவரது அரசியல் வாழ்க்கையை நான் அழிக்க விரும்பவில்லை," என்று சிரித்துக்கொண்டே கூறினார்.
அதன்பின்னர், "நான் பல ஆண்டுகளாக இந்தியாவைப் பார்த்து வருகிறேன். அது ஒரு நம்பமுடியாத நாடு. ஒவ்வொரு வருடமும் அங்கே ஒரு புதிய தலைவர் இருப்பார். சிலர் ஒரு சில மாதங்கள் பதவியில் இருப்பார்கள். ஆனால், இப்போது எனது நண்பர் (மோடி) நீண்ட காலமாக அங்கே இருக்கிறார்," என்று கூறினார்
டிரம்பின் கூற்றுக்கு மாறாக, இந்தியாவில் 2014-ம் ஆண்டு முதல் நரேந்திர மோடியே பிரதமராக உள்ளார். அதற்கு முன்பு, மன்மோகன் சிங் தொடர்ந்து பத்து ஆண்டுகள் பிரதமராகப் பதவி வகித்தார். 25 ஆண்டுகளாக இந்தியாவில் நிலையான ஆட்சியே இருந்துவருகிறது.
ஆனால், "ஒவ்வொரு வருடமும் ஒரு புதிய தலைவர்" என டிரம்ப் கூறியது பாகிஸ்தானுக்குச் சரியாகப் பொருந்துகிறது. 1947-ல் உருவாக்கப்பட்டதில் இருந்து, பாகிஸ்தானில் இதுவரை 29 பிரதமர்கள் பதவி வகித்துள்ளனர். அவர்களில் ஒருவர்கூட முழு ஐந்தாண்டு காலத்தையும் பூர்த்தி செய்தது இல்லை.
ஊழல் குற்றச்சாட்டுகள், இராணுவப் புரட்சி, ராஜினாமா அல்லது நம்பிக்கையில்லாத் தீர்மானம் (இம்ரான் கான் விஷயத்தில் நடந்தது போல) போன்ற காரணங்களால் பிரதமர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 1993-ல் மட்டும் ஒரு வருடத்தில் ஐந்து தலைவர்கள் பதவியேற்றனர்.
79 வயதாகும் டொனால்ட் டிரம்ப், கடந்த சில மாதங்களாகவே நாடுகளையும், உலகத் தலைவர்களையும் குழப்பிக்கொள்கிறார். டிரம்ப் பேச்சுகளில் காணப்படும் இதுபோன்ற குழப்பமான கருத்துகளால் அவரது நினைவாற்றல் குறித்த கேள்விகள் எழுந்து வருகின்றன.
புதன்கிழமை அன்று, அவர் இந்தியா குறித்துப் பேசியபோது, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அணு ஆயுதப் போரைத் தடுத்து நிறுத்தியதாக மீண்டும் ஒருமுறை கூறினார். அப்போதும் இந்தியாவை ஈரானுடன் குழப்பிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.