ஆபரேஷன் சிந்தூர் கொடுத்த ஷாக்.. எங்க ஏர்பேஸ் காலி! உண்மையை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் அமைச்சர்!

Published : Dec 29, 2025, 02:52 PM IST
Pakistan on Operation Sindoor

சுருக்கம்

கடந்த மே மாதம் நடைபெற்ற 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது, இந்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமான தளம் சேதமடைந்ததை பாகிஸ்தான் முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.

கடந்த மே மாதம் நடைபெற்ற 'ஆபரேஷன் சிந்தூர்' (Operation Sindoor) நடவடிக்கையின் போது, இந்தியாவின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் ராவல்பிண்டியில் உள்ள முக்கிய ராணுவ விமான தளம் பலத்த சேதமடைந்ததை பாகிஸ்தான் முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.

பாகிஸ்தானின் துணைப் பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தார், சனிக்கிழமை நடைபெற்ற ஆண்டு இறுதி செய்தியாளர் சந்திப்பில் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார். ராவல்பிண்டியின் சக்லாலா பகுதியில் உள்ள நூர் கான் விமான தளத்தை (Nur Khan Air Base) இந்தியப் படைகள் குறிவைத்ததாகவும், இதில் தளவாடங்கள் சேதமடைந்ததுடன் ராணுவ வீரர்கள் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் பின்னணி

ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் இந்த நடவடிக்கையைத் தொடங்கியது.

36 மணி நேர இடைவெளியில் இந்தியா சுமார் 80 ட்ரோன்களை அனுப்பியதாக இஷாக் தார் தெரிவித்தார். அவற்றில் 79 ட்ரோன்களை இடைமறித்து அழித்துவிட்டதாகவும், ஒரு ட்ரோன் மட்டும் விமான தளத்தைத் தாக்கியதாகவும் அவர் உரிமை கோரியுள்ளார்.

மே 10 அதிகாலை 2:30 மணியளவில் இந்தியாவின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் நூர் கான் விமான தளத்தைத் தாக்கியதாக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஏற்கனவே ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.

செயற்கைக்கோள் ஆதாரங்கள்

மேக்சர் டெக்னாலஜிஸ் (Maxar Technologies) வெளியிட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள், நூர் கான் விமான தளம் உள்பட பாகிஸ்தானின் நான்கு முக்கிய விமான தளங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தின.

ஏப்ரல் 25 மற்றும் மே 10 ஆகிய தேதிகளில் எடுக்கப்பட்ட படங்களை ஒப்பிடுகையில், இந்தியாவின் துல்லியமான தாக்குதல்கள் (Precision Strikes) பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு கட்டமைப்பைச் சிதைத்துள்ளது தெளிவாகத் தெரிகிறது.

தற்போதைய நிலை

இந்தத் தீவிர மோதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநர் (DGMO) தரப்பிலிருந்து போர்நிறுத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நிலம், நீர் மற்றும் வான் என அனைத்துப் பகுதிகளிலும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி உறுதிப்படுத்தியுள்ளார்.

வழக்கமாக இந்தியா நடத்தும் தாக்குதல்களை மறுக்கும் பாகிஸ்தான், இம்முறை தனது ராணுவத் தளங்கள் மீதான பாதிப்பை பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருப்பது சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மனைவி உயிரைக் காப்பாற்றிய 50 டன் கிழங்கு தானம்! சீனாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
டிரம்ப் தான் ரியல் ஹீரோ.. என் நோபல் பரிசு அவருக்குதான்.. ஐஸ் வைக்கும் வெனிசுலா மச்சாடோ!