சட்டவிரோத எரிபொருளை வாங்க காத்திருந்த பல்வேறு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நைஜீரியாவில் இயங்கி வந்த சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இதுவரை சுமார் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அவசர சேவைகள் பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
உயிரிழப்பு:
இந்த தீ விபத்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்குள்ள எண்ணெய் கிடங்குகளில் தீ வேகமாகப் பரவியது. தீ விபத்து தெற்கு ஆயில் ஸ்டேட்ஸ் ஆப் ரிவர்ஸ் மற்றும் இமோ இடையிலான பகுதியில் ஏற்பட்டது. இதுவரை தீ விபத்தில் உயிரிஓந்த 100 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. எனினும், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என நைஜீரியா நாட்டுக்கான தேசிய அவசர கால நிர்வாகக் குழு அமைப்பு தெரிவித்து உள்ளது.
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு பணியில் இருந்த பலர் உயிரிழந்தனர் என காவல்துறை செய்தி தொடர்பாளர் மைக்கேல் அபாட்டம் தெரிவித்தார். மேலும் தீ விபத்து ஏற்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய உரிமையாளரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து இருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.
கவலைக்கிடம்:
உயிரிழந்தோர் தவிர மேலும் பலர், மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.
கடும் பாதிப்புகள் மற்றும் உயிரை காவு வாங்கும் ஆபத்துக்கள் நிறைந்து இருந்த போதிலும் வேலையின்மை, ஏழ்மை போன்ற காரணங்களால் எண்ணெய் சுத்தகரிப்பு தொழில் நைஜீரியாவில் கவரச்சிகர வியாபாரமாக பார்க்கப்பட்டு வருகிறது. முன்னணி எண்ணெய் நிறுவனங்களின் பைப் லைன்களில் இருந்து எடுக்கப்பட்ட கச்சா எண்ணெய், இதுபோன்ற ஆலைகளில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருகிறது.
எண்ணெய் சுத்திகரிப்பு பணி மிகவும் ஆபத்து நிறைந்தது என்பதால், பலமுறை இங்கு விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. சட்டவிரோத எரிபொருளை வாங்க காத்திருந்த பல்வேறு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்துள்ளன என்று இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்து உள்ளது.