Dec 9, 2024, 7:21 PM IST
நடிகர் சீயான் விக்ரம், தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தங்கலான்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், வசூல் ரீதியாக 100 கோடியை எட்டியது.
தற்போது பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா, போன்ற திரைப்படங்களை இயக்கிய எஸ் யு அருண் இயக்கத்தில் விக்ரம் நடித்து முடித்துள்ள திரைப்படம் வீர தீர சூரன். இவருக்கு ஜோடியாக நடிகை தூஷரா விஜயன் நடிக்க, எஸ் ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சுராமுடி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா ஜிகே படத்தொகுப்பு செய்ய, இந்த திரைப்படம் அதிரடி ஆக்சன் கதைக்களத்தில், சென்டிமென்ட் நிறைந்த எமோஷனல் படமாகவும் உருவாகியுள்ளது. எனவே நீண்ட இடைவெளிக்கு பின்னர், தூள், மஜா, போன்ற படங்களில் நடித்த விக்ரமை இந்த படத்தில் பார்க்க முடியும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 2025-ஆம் ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ள 'வீர தீர சூரன் பார்ட் 2' திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.