Jul 25, 2024, 4:32 PM IST
இன்றைய காலகட்டத்தில் பல கோடிகள் செலவு செய்து எடுக்கப்படும் சில படங்கள் கூட, பெரிய அளவில் வசூல் செய்யாமல் போய்விடுகிறது. ஆனால் இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான மலையாள திரைப்படமான மஞ்சும்மல் பாய்ஸ், 20 கோடி செலவில் எடுக்கப்பட்டு உலக அளவில் சுமார் 200 கோடி ரூபாய் வசூல் செய்தது மகத்தான சாதனையாக பார்க்கப்படுகிறது.
இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி உலக அளவில் வெளியான திரைப்படம் தான் "மஞ்சும்மல் பாய்ஸ்". சிறு வயது முதல் பழகும் நண்பர்கள் குழு ஒன்று, சுற்றுலா செல்கின்றனர். அப்போது குணா குகைக்குள் தவறி விழும் அந்த குழுவில் இருக்கும் ஒரு நபரை காப்பாற்ற, பிறர் அனைவரும் போராடுகின்றனர். இது தான் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் கதைச்சுருக்கம்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் கோலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றியை பெறாத நிலையில் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படம் மாறியது. குறிப்பாக தமிழகத்திலும் பிற மொழிகளிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் தற்பொழுது OTT தளத்திலும் வெளியாகியுள்ளது.
இந்த சூழலில், குணா குகையை வடிவமைத்தது எப்படி? அதற்குள் எடுக்கப்பட்ட காட்சிகளை தத்ரூபமாக உருவாக்கியது எப்படி? போல பல தகவல்களை ஒரு வீடியோ மூலம் பகிர்ந்துள்ளது பட குழு. உண்மையில் 2 கோடி பட்ஜெட்டில் இப்படி ஒரு கிராபிக்ஸ் காட்சிகள் அமைக்கப்பட்டது பெரும் சாதனையாகவே பார்க்கப்படுகிறது.