
சின்னத்திரையில் தொடங்கி வெள்ளித்திரையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த பிளாக் பாண்டி, தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டிற்குள் நுழையும் போட்டியாளர்களில் ஒருவராக கவனம் பெற்றுள்ளார். பிக்பாஸ் தமிழ் சீசன் 10 இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த சீசனில் சினிமா, சின்னத்திரை மற்றும் சமூக ஊடகப் பிரபலங்களுடன் பிளாக் பாண்டியும் களமிறங்குகியுள்ளார்.
பிளாக் பாண்டியின் உண்மையான பெயர் லிங்கேஸ்வரன். மதுரையைச் சேர்ந்த இவர், தனது நடிப்பு பயணத்தை சின்னத்திரையின் மூலம் தொடங்கினார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ தொடரில் ‘பாண்டி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இளைஞர்கள் மத்தியில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். தொடர்ந்து பல்வேறு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த அவர், தனது நடிப்புத் திறமையுடன் ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சியில் பங்கேற்று நடனத் திறமையையும் வெளிப்படுத்தினார்.
சின்னத்திரையில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, பிளாக் பாண்டி திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். குறிப்பாக ‘அங்காடித் தெரு’ திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்தது. இதில் அவர் மாரிமுத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பிளாக் பாண்டி பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் சின்ன சின்ன துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கில்லி, ஆட்டோகிராப், லீ, முருகா, அங்காடித்தெரு, மாஞ்சாவேலு, தெய்வத்திருமகள், வேலாயுதம், நீர்ப்பறவை, சாட்டை, ஜில்லா, பூஜை, சகலகலா வல்லவன், பண்டிகை, மிருகா உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.
திரைப்படங்களில் பெரும்பாலும் நகைச்சுவை மற்றும் துணை கதாபாத்திரங்களில் பார்த்த பிளாக் பாண்டியை, இப்போது ‘ரியல்’ பிளாக் பாண்டியாக ரசிகர்கள் பார்க்க உள்ளனர். பிக்பாஸ் வீடு என்பது நடிப்பு இல்லாமல் தனிப்பட்ட குணம், பொறுமை, வாக்குவாதத்தை கையாளும் திறன், நட்பு மற்றும் டாஸ்க் செயல்பாடு ஆகிய அனைத்தையும் வெளிப்படுத்த வேண்டிய களம்.
அதனால், எப்போதும் ரசிகர்களை சிரிக்க வைத்த பிளாக் பாண்டி, பிக்பாஸ் வீட்டில் காமெடி கலந்த போட்டியாளராக இருப்பாரா? அல்லது எதிர்பாராத வகையில் தனது இன்னொரு முகத்தை வெளிப்படுத்துவாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. குறிப்பாக பல ஆண்டுகளாக சினிமாவில் இருந்த அனுபவம் அவருக்கு பிக்பாஸ் போட்டியில் எந்த அளவுக்கு கை கொடுக்கப் போகிறது என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சினிமாவில் துணை நடிகர்.. சின்னத்திரையில் பிரபலமான முகம்.. இப்போது பிக்பாஸ் போட்டியாளர். பிளாக் பாண்டியின் இந்த புதிய பயணம் ரசிகர்களுக்கு நிச்சயம் வித்தியாசமான அனுபவமாக அமையும்.