
ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய அலையை ஏற்படுத்தி iQOO 15R இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தின் முதன்மை வரிசையில் இடம்பெறும் இந்த மாடல், உயர்நிலை iQOO 15 உடன் சந்தைக்கு வருகிறது. 1.5K ரெசல்யூஷன் கொண்ட AMOLED டிஸ்ப்ளே மற்றும் 144Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் ஆகியவை இந்த போனின் முக்கிய அம்சங்களாகும். கேமிங் அனுபவத்தை மேம்படுத்த பிரேம் இன்டர்போலேஷன் தொழில்நுட்பமும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 பிராசஸர் iQOO 15R ஸ்மார்ட்போனுக்கு சக்தி அளிக்கிறது. இதே சிப்செட் ஒன்பிளஸ் 15-லும் பயன்படுத்தப்படுகிறது. 12GB வரை LPDDR5x ரேம், 512GB வரை UFS 4.1 ஸ்டோரேஜ் மற்றும் அட்ரினோ 826 ஜிபியு ஆகியவை சிறந்த செயல்திறனை உறுதி செய்கின்றன. கேமரா அமைப்பில் 50 மெகாபிக்சல் சோனி LYT-700V பிரதான கேமரா (OIS உடன்) மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 7,600mAh திறன் கொண்ட பெரிய பேட்டரி மற்றும் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகியவை இந்த போனை நீண்ட நேரம் பயன்படுத்த ஏற்றதாக மாற்றுகிறது.
விலையைப் பொறுத்தவரை, iQOO 15R-ன் 8GB + 256GB மாடலின் ஆரம்ப விலை ரூ.44,999 ஆகும். 12GB + 256GB மாடல் ரூ.47,999-க்கும், 12GB + 512GB மாடல் ரூ.52,999-க்கும் கிடைக்கிறது. அமேசான், iQOO இந்தியா ஸ்டோர் மற்றும் விவோ ரீடெய்ல் ஸ்டோர்கள் வழியாக முன்பதிவு தொடங்கியுள்ளது. HDFC மற்றும் ஆக்சிஸ் வங்கி கார்டுகளைப் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.4,000 தள்ளுபடியும் கிடைக்கிறது.