அதிக வாடிக்கையாளர்களை கவரும் வகையில் டாடா பிளே நிறுவனம் தனது சேனல் கட்டணங்களை அதிரடியாக குறைத்து இருக்கிறது.
பல துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் தங்களுக்கு கிடைக்கும் வருவாயை அதிகப்படுத்தும் நோக்கில் விலை உயர்வை தொடர்ந்து அறிவித்து வரும் நிலையில், டாடா பிளே தனது சேவை கட்டணங்களை குறைத்து இருக்கிறது. சேனல்கள் மற்றும் சலுகைகளின் கட்டணத்தை டாடா பிளே குறைத்து இருக்கிறது. இதன் மூலம் பயனர்களை ஓ.டி.டி. தளங்களுக்கு மாற விடாமல் தடுக்க டாடா பிளே திட்டமிட்டுள்ளது.
விலை குறைப்பு சலுகையில் டாடா பிளே சிறு டுவிஸ்ட் வைத்திருக்கிறது. அதன்படி டாடா பிளே அறிவித்து இருக்கும் புது விலை குறைப்பு எப்படி வழங்கப்படுகிறது என்ற விவரங்களை பார்ப்போம். விலை குறைப்பின் படி பயனர்களுக்கு ரூ. 30 முதல் அதிகபட்சம் ரூ. 100 வரை மாதாந்திர அடிப்படையில் விலை குறையும்.
கட்டண தொலைகாட்சிக்கான மோகம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்த நிலையில், விலை குறைப்பின் மூலம் பயனர்கள் தொடர்ந்து இந்த சேவைகளை பயன்படுத்தலாம் என டாடா பிளே நம்புகிறது. இந்தியாவில் டாடா பிளே தற்போது 1.9 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
சமீப காலங்களில் பயனர்கள் தங்களின் சந்தா முறையை அதிகப்படுத்தாமல், குறைக்க துவங்கி இருக்கின்றனர். இதன் காரணமாக சேவை கட்டணங்களை குறைக்க டாடா பிளே முடிவு செய்துள்ளது. எனினும், விலை குறைப்பு தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. பயனர்கள் எவ்வாறு டாடா பிளே சேவையை பயன்படுத்துகின்றனர் என்ற அடிப்படையில் விலை குறைப்பு வழங்கப்படும்.
பயனர் தேர்வு செய்து இருக்கும் காம்போ பேக்குகளில் அவர்கள் அதிகம் பார்க்காத சேனல்களின் கட்டணம் குறைக்கப்படும். இதன் மூலம் பயனர்களுக்கு, அவர்கள் பார்க்கும் சேனல்களுக்கு மட்டும் தான் பணம் கொடுக்கிறோம் என்ற உணர்வு ஏற்படும். இது அவர்களுக்கு சேமிப்பாகவும் அமையும். தற்போதைய சந்தை சூழலில் டாடா பிளே அறிவித்து இருக்கும் விலை குறைப்பு நடவடிக்கை வரவேற்கும் வகையிலேயே அமைந்துள்ளது.