தமிழ்நாட்டைக் குறிவைக்கும் எஸ்பிஐ ரிவார்டு பாயிண்ட் மோசடி! பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிகை!

By SG BalanFirst Published Jul 9, 2024, 6:27 PM IST
Highlights

2024 மே மற்றும் ஜூன் மாதங்களில் மட்டும் தேசிய சைபர் கிரைம் ரிப்போர்ட் போர்ட்டல் மூலம் இந்த மோசடி குறித்து தமிழகத்தில் இருந்து 73 புகார்கள் வந்துள்ளன.

‘எஸ்பிஐ ரிவார்டு பாயிண்ட் மோசடி’ குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு தமிழக சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

தேசிய சைபர் கிரைம் இணையதளத்தில் மே மற்றும் ஜூன் மாதங்களில் பதிவு செய்யப்பட்ட எஸ்பிஐ ரிவார்டு பாயிண்ட் மோசடியில் 73 புகார்கள் தமிழகத்தில் இருந்து வந்துள்ளன என தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Latest Videos

மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் மொபைல் போன்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்களை ஹேக் செய்து, எஸ்பிஐ ரிவார்டு பாயிண்ட்கள் குறித்து போலியான செய்திகளை அனுப்புகிறார்கள் என்றும் சைபர் கிரைம் போலீசார் கூறுகின்றனர்.

ஹேக்கர்கள் வாட்ஸ்அப் மூலமாகவும் இந்த பொய்யான செய்தியை அனுப்புகிறார்கள். எஸ்பிஐ பெயரில் போலியான வாட்ஸ்அப் குழுவை உருவாக்குகின்றனர். ஏமாற்று வேலைக்காக குரூப்பின் பெயரை "ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா" என்று வைத்துக்கொள்கிறார்கள். ஸ்டேட் வங்கியின் படத்தையே DP ஆகவும் வைக்கிறார்கள்.

மோசடிக்காரர்கள் வங்கி விவரங்களைப் அப்டேட் செய்தால் ரிவார்டு புள்ளிகளைப் பெறலாம் என்று கூறி போலி லிங்க்  ஒன்றை மெசேஜில் அனுப்புகிறார்கள். அதைக் கிளிக் செய்யவே கூடாது. தவறி கிளிக் செய்தால் நிதி இழப்புகளுக்கு வழிவகுக்கும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கின்றனர்.

மோசடி பேர்வழிகள், ரிவார்டு பாயிண்டுகள் காலாவதியாகப் போகின்றன என்று கூறி அவசர உணர்வை உருவாக்குகிவார்கள். அதனால், அவர்கள் அனுப்பிய லிங்க்கை கிளிக் செய்யும் நபர்கள் பாதிக்கப்படுகிறார்கள். 2024 மே மற்றும் ஜூன் மாதங்களில் மட்டும் தேசிய சைபர் கிரைம் ரிப்போர்ட் போர்ட்டல் மூலம் இந்த மோசடி குறித்து தமிழகத்தில் இருந்து 73 புகார்கள் வந்துள்ளன.

ரிவார்டு பாயிண்ட் பெற APK கோப்பைப் பதிவிறக்கும்படியும் சொல்வார்கள். அந்த மால்வேர் கோப்பை மொபைலில் நிறுவுவதன் மூலம், உங்களுக்கே தெரியாமல் மொபைலில் இருந்து வங்கித் தகவல்கள், பாஸ்வேர்டு, OTP போன்ற முக்கியமான விவரங்களைத் திருடுகிறார்கள். அந்த மால்வேர் மொபைலில் நிறுவியுள்ள வாட்ஸ்அப் கணக்கின் தரவுகளையும் திருடுவதால், மொபைலில் சேமித்துள்ள மற்ற எண்களுக்கும் ஃபிஷிங் லிங்க்கை அனுப்புகிறார்கள்.

சைபர் கிரிமினல்களிடம் உஷாராக இருப்பதுடன், இதேபோன்ற மோசடியால் பாதிக்கப்பட்டாலோ, சந்தேகத்திற்கிடமான நடவடிக்கையை உணர்ந்தாலோ உடனே சைபர் கிரைம் போலீசாரை 1930 என்ற ஹெல்ப்லைன் மூலம் தொடர்புகொள்ளலாம். அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தின் மூலமும் புகாரைப் பதிவு செய்யலாம்.

click me!