டாடா பிளே அறிமுகம் செய்து இருக்கும் புதிய காம்போ பேக்குகளுடன் நெட்ஃப்ளிக்ஸ் சேவை வழங்கப்படுகிறது.
டாடா ஸ்கை-இல் இருந்து சமீபத்தில் டாடா பிளே என மாறி இருக்கும் டி.டி.ஹெச். ஆப்பரேட்டர் அசத்தலான புது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி டாடா பிளே காம்போ பேக்குகளுடன் நெட்ஃப்ளிக்ஸ் சேவை வழங்கப்படுகிறது. இதற்கென 90 பண்டில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை லீனியர் சேனல்கள் மற்றும் பின்ஜ் காம்போ பேக்குகளுடன் வழங்கப்படுகின்றன.
முன்னதாக டாடா ஸ்கை பின்ஜ் பிளஸ் பயனர்களுக்கு ஆண்ட்ராய்டு ஹைப்ரிட் செட்-அப் பாக்ஸ்-இல் நெட்ஃப்ளிக்ஸ் பயன்படுத்துவதற்கான வசதி வழங்கப்பட்டு இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து டாடா பிளே, செய்தி குறிப்பு மூலம் நெட்ஃப்ளிக்ஸ் சேவை வழங்குவது பற்றிய தகவலை அறிவித்துள்ளது.
டாடா பிளே நெட்ஃப்ளிக்ஸ் காம்போ பேக்குகளின் கீழ் நெட்ஃப்ளிக்ஸ் சேவைக்கான வசதி வழங்கப்படுகிறது. இதில் பயனர் விருப்பப்படி நெட்ஃப்ளிக்ஸ் பேசிக், ஸ்டாண்டர்டு மற்றும் பிரீமியம் பிளான்கள் வழங்கப்படும். இதற்கான கட்டணத்தை பயனர்கள் டாடா பிளே வாலெட் மூலம் செலுத்தலாம். அதன்படி நெட்ஃப்ளிக்ஸ் சந்தாவுக்கு ஏற்ப டாடா பிளே வாலெட்டில் கட்டணத்தை ஏற்றி நேரடியாக பணம் செலுத்தலாம்.
மேலும் டாடா பிளே நெட்ஃப்ளிக்ஸ் காம்போ பேக்குகளை பெறுவோர் தங்களின் டாடா பிளே பின்ஜ் பிளஸ் ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ் மூலம் டி.வி.யில் நெட்ஃப்ளிக்ஸ் பார்த்து ரசிக்க முடியும். இதுமட்டுமின்றி ஸ்மார்ட் டி.வி., ஸ்டிரீமிங் சாதனங்கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் கணினி உள்ளிட்ட சாதனங்களிலும் பார்க்கலாம். ஏற்கனவே டாடா பிளே சேவையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், இரோஸ் நௌ மற்றும் சோனி லைவ் போன்ற தளங்களுக்கான சேவை வழங்கப்படுகிறது.
முன்னதாக 2018 வாக்கில் தனது சந்தாதாரர்களுக்கு பிரத்யேக தரவுகளை வழங்கும் நோக்கில் டாடா ஸ்கை நெட்ஃப்ளிக்ஸ் உடன் கூட்டணி அமைத்தது. எனினும், இந்த சேவை டாடா பிளே பின்ஜ் பிளஸ் சேவையில் வழங்கப்படவில்லலை. ஏர்டெல் டிஜிட்டல் டி.வி. தனது எக்ஸ்டிரீம் செட்-டாப் பக்ஸ் பயனர்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் சேவையை ஏற்கனவே வழங்கி வருகிறது.