
ஆப்பிள், சாம்சங் போன்ற முன்னணி நிறுவனங்களின் பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச்களுக்குப் போட்டியாக, மோட்டோரோலா தனது புதிய 'மோட்டோ வாட்ச் அல்ட்ரா' (Moto Watch Ultra) மாடலை சர்வதேச சந்தையில் களமிறக்கியுள்ளது. சக்திவாய்ந்த அம்சங்களுடன் வெளிவந்துள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச், விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வாட்ச்சின் மிக முக்கிய சிறப்பம்சமாக அதன் பேட்டரி அமைந்துள்ளது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் இரண்டு நாட்கள் வரை தடையின்றி பயன்படுத்த முடியும். அதுமட்டுமல்லாமல், இதன் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் மூலம் வெறும் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும், முழுதாக 24 மணி நேரத்திற்கு வாட்ச்சை இயக்க முடியும் என்பது ஆச்சரியமான விஷயம்தான்.
செயல்திறனுக்காக இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் W5+ Gen 1 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. கூகுளின் லேட்டஸ்ட் 'வியர் ஓஎஸ் 6' இயங்குதளத்தில் இது செயல்படுகிறது. இதன் மூலம், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் மேப்ஸ், கூகுள் பே, ஜெமினி மற்றும் யூடியூப் மியூசிக் போன்ற செயலிகளைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
மேலும், இந்த வாட்சிற்கு இரண்டு முக்கிய ஓஎஸ் அப்டேட்கள் வழங்கப்படும் என்றும் மோட்டோரோலா உறுதியளித்துள்ளது. இ-சிம் (வசதி, எல்.டி.இ மற்றும் டூயல்-பேண்ட் ஜிபிஎஸ் போன்ற இணைப்பு வசதிகளும் இதில் உள்ளன. தூசி மற்றும் தண்ணீரிடமிருந்து பாதுகாக்க IP68 மற்றும் 5ATM சான்றிதழ்களையும் இது பெற்றுள்ளது.
டிஸ்பிளே எப்படி?
டிஸ்பிளேவைப் பொறுத்தவரை, 1.5 இன்ச் அளவிலான வளைந்த pOLED திரை கொடுக்கப்பட்டுள்ளது. 2700 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் இருப்பதால், நேரடி சூரிய ஒளியிலும் திரையைத் தெளிவாகப் பார்க்க முடியும். திரையின் பாதுகாப்பிற்காக கொரில்லா கிளாஸ் 3 வழங்கப்பட்டுள்ளதுடன், இதன் பாடி ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உடல்நலனைக் கண்காணிக்க இதயத் துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு மற்றும் தூக்கத்தின் தரம் ஆகியவற்றைக் கண்காணிக்கும் சென்சார்கள் இதில் இடம்பெற்றுள்ளன. உடற்பயிற்சி பிரியர்களுக்காக 'ரன்னிங் கோச்' என்ற பிரத்யேக அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது.
சிலிகான் மற்றும் லெதர் ஸ்ட்ராப் தேர்வுகளில், பான்டோன் வண்ணங்களில் இந்த வாட்ச் கிடைக்கிறது. ஐரோப்பிய சந்தையில் இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.47,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விரைவில் ஆசிய சந்தைகளிலும் இது விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மற்றும் அவசரகால வசதிகள்
திடீரென பயனர் கீழே விழுந்தால் அதனைக் கண்டறியும் 'ஃபால் டிடெக்ஷன்' வசதி இதில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் அவசர காலத்தில் குறிப்பிட்ட தொடர்புகளுக்குத் தானாகவே குறுஞ்செய்தி மற்றும் இருப்பிடத் தகவல்கள் அனுப்பப்படும். மேலும், இதில் உள்ள உள்ளமைக்கப்பட்ட மைக்ரோஃபோன் மற்றும் ஸ்பீக்கர் மூலம் போன் இல்லாமலேயே நேரடியாக அழைப்புகளைப் பேச முடியும்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.