அறிமுகம் செய்யப்பட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே பல மில்லியன் பயனர்களை மெட்டா நிறுவனத்தின் த்ரெட்ஸ் ஆப் பெற்றுள்ளது
உலகின் மிகப்பெரிய சமூக வலைதளமாக கருதப்படும் மைக்ரோ-ப்ளாகிங் சைட்டான ட்விட்டரை உலகப் கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அண்மையில் வாங்கினார். இதையடுத்து, ட்விட்டரில் அவர் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார். இது ட்விட்டர் பயனர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.
இதனிடையே, இன்ஸ்டாகிராம் வாயிலாக ட்விட்டர் போன்ற ஒரு தளத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் தெரிவித்தது. அதற்கு த்ரெட்ஸ் என்றும் பெயரிடப்பட்டது. இந்த 'Threads' தளமானது ஜூலை 6ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் மெட்டா நிறுவனம் தெரிவித்தது.
undefined
அதன்படி, த்ரெட்ஸ் (Threads) தளம் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருப்பவர்கள் அதனுடைய பயனர் விவரங்களை கொண்டே த்ரெட்ஸ் செயலியில் உள்நுழையலாம். இதற்காக தனி கணக்கு தொடங்க தேவையில்லை. Threads என்பது Instagram இன் text அடிப்படையிலான ஒரு உரையாடல் செயலி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் 500 எழுத்துக்கள் வரை ஒரு பதிவில் எழுதலாம். textகள் பிரதானம் என்றாலும் கூட, புகைப்படங்கள், ஷார்ட்ஸ், வீடியோக்களையும் பகிர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்டா நிறுவனத்தின் த்ரெட்ஸ் செயலி ட்விட்டருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த நிலையில், அறிமுகம் செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே பல மில்லியன் பயனர்கள் அதனை டவுன்லோடு செய்து கணக்கு தொடங்கியுள்ளனர். 7 மணி நேரத்தில் 10 மில்லியன் பயனர்கள் அதில் கணக்கு தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Instagram-ன் 5 சீக்ரெட் அம்சங்கள் தெரியுமா.? தெரிஞ்சா அசந்துடுவீங்க
த்ரெட்ஸ் செயலியை அறிமுகம் செய்துள்ள மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸூகர்பெர்க், முதல் இரண்டு மணி நேரத்தில் 2 மில்லியன் பயனர்களும், முதல் 4 மணி நேரத்தில் 5 மில்லியன் பயனர்களும், முதல் 7 மணி நேரத்தில் 10 மில்லியன் பயனர்களும் கணக்கு தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
த்ரெட்ஸ் தளமானது ட்விட்டரை விட சிறப்பாக செயல்படுமா என்ற கருத்துகள் கடுமையாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. இன்ஸ்டாகிராம் மூலமாக ஏற்கனவே குறிப்பிட்ட பயனர்கள் தளம் த்ரெட்ஸ் செயலிக்கு கிடைக்கின்றனர் என சுட்டிக்காட்டப்படுகிறது. ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யாக்கரினோ மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் வணிகத்தை புதுப்பிக்க முயற்சிக்கும் நேரத்தில், ஏற்கனவே உள்ள பயனர் தளம் த்ரெட்ஸ்ஸுக்கு பயனுள்ளதாகவே இருக்கும் என சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். இருப்பினும், ட்விட்டரில் செய்தி சார்ந்த கண்ணோட்டம் இருப்பதாகவும், புகைப்படக்காட்சி தளமாக அறியப்படும் Instagram ட்விட்டர் அளவுக்கு மாறுவது கடினம் எனவும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
ட்விட்டரின் பயனர் தளத்திற்கு போட்டியாக த்ரெட்ஸ் வரவேண்டும் எனில், மெட்டாவுக்கு அதன் இன்ஸ்டாகிராம் பயனர்களில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே தேவையாக உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
ட்விட்டரை விட த்ரெட்ஸ் பெரியதாக மாறுமா என்ற கேள்விக்கு பதிலளித்த மார்க் ஸூகர்பெர்க், “இதற்கு சிறிது நேரம் எடுக்கும், ஆனால் 1 பில்லியனுக்கும் அதிகமான மக்களுடன் ஒரு பொது உரையாடல் செயலி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ட்விட்டருக்கு இதைச் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தும் அவர்கள் அதனை பயன்படுத்தவில்லை. அதனை நாங்கள் செய்வோம் என்ற நம்பிக்கை உள்ளது.” என்றார்.
இதனிடையே, 11 ஆண்டுகளுக்கு பிறகு ட்விட்டரில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார் மார்க் ஸூகர்பெர்க். கடைசியாக கடந்த 2012ஆம் ஆண்டில் ஸூகர்பெர்க் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். அதன்பிறகு, த்ரெட்ஸ் அறிமுகத்தையொட்டி, தற்போது தான் அதாவது 11 ஆண்டுகளுக்கு பிறகு ட்விட்டரில் ட்வீட் ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார். அந்த ட்வீட்டில் ஒரே ஒரு மீம் மட்டும் பகிரப்பட்டுள்ளது. வேறு எந்த தகவலையும் அவர் பதிவிடவில்லை.
மார்க் பதிவிட்டுள்ள அந்த மீமில், ஸ்பைடர் மேன் கதாபாத்திரம் தன்னைப் போன்றே இன்னொரு உருவத்தை எதிர்கொள்ளும் ஃபேஸ் ஆஃப் காட்சி இடம் பெற்றிருக்கிறது. இதனை பார்க்கும் நெட்டிசன்கள், ட்விட்டருக்கு போட்டியாக த்ரெட்ஸ் களம் இறங்கியதைக் குறிக்கும் வண்ணத்தில் இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, கடந்த மாத இறுதியில், மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஸூகர்பெர்க் உடன் கூண்டுக்குள் நேருக்கு நேர் மோத தான் தயார் என ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் ட்வீட் செய்திருந்தார். அதை கவனித்த மார்க் ஸூகர்பெர்க் மோதலுக்கு தானும் தயார் என இன்ஸ்டாகிராம் வாயிலாக சம்மதம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், த்ரெட்ஸ் மூலம் ட்விட்டருக்கு எதிராக எலான் மஸ்க் உடன் ஒரே கூண்டுக்குள் குதித்துள்ளார் மார்க் ஸூகர்பெர்க்.