கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்ப வசதியை வழங்குவதற்காக இஸ்ரேல் அரசுடன் கூகுள் நிறுவனம் 1.2 பில்லியன் டாலர் மதிப்பிலான ப்ராஜெட் நிம்பஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
ப்ராஜெக்ட் நிம்பஸ் எனப்படும் இஸ்ரேலிய அரசாங்கத்துடனான 1.2 பில்லியன் டாலர் கிளவுட் கம்ப்யூட்டிங் ஒப்பந்தத்துக்கு எதிராகப் போராடியதன் எதிரொலியாக 28 ஊழியர்களை கூகுள் நிறுவனம் பணியில் இருந்து நீக்கியுள்ளது.
செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 16) கூகுள் நிறுவனத்தின் நியூயார்க் மற்றும் கலிபோர்னியா அலுவலகங்களுக்குள் அத்துமீறி நுழைந்து முழக்கமிட்ட ஒன்பது கூகுள் ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட 9 மணிநேரம் அவர்களின் உள்ளிருப்புப் போராட்டம் நீடித்தது. அதைத் தொடர்ந்து இந்தப் பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஏப்ரல் 17 அன்று அனைத்து ஊழியர்களுக்கும் அனுப்பிய மெமோ பற்றி கூகுளின் உலகளாவிய பாதுகாப்புத் தலைவர் கிறிஸ் ராகோவ் தெரிவித்துள்ளார். அதில், "பணியிடத்தில் இதுபோன்ற நடத்தைக்கு இடமில்லை" என்று கூறப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
"எங்கள் பணியிடத்தில் இதுபோன்ற நடத்தைக்கு இடமில்லை. அதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். இது தெளிவாக அனைத்து ஊழியர்களும் கடைபிடிக்க வேண்டிய கொள்கைகளை மீறும் செயல்" என கூகுள் தனது எச்சரிக்கைச் செய்தியில் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற நடத்தைக்கான விளைவுகள் கடுமையாக இருக்கும் என்றும் இத்தகைய நடத்தையால் சக பணியாளர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள் எனவும் என்றும் கூகுள் அறிக்கை கூறுகிறது. கூகுள் தனது கொள்கைகளை மீறும் நடத்தையை கண்டுகொள்ளாமல் விட்டுவிடும் என்று ஊழியர்கள் எதிர்பார்க்க வேண்டாம் என்றும் ராகோவ் தெரிவித்துள்ளார்.
போராட்டம் நடத்தியவர்களிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட 28 ஊழியர்களை இன்று வேலையில் இருந்து நிறுத்தியுள்ளோம். இது குறித்து தொடர்ந்து விசாரணை செய்து தேவைப்பட்டால் இன்னும் நடவடிக்கை எடுப்போம் எனவும் ராகோவ் தெரிவித்துள்ளார்.