தனிமையில் இருந்தவரிடம் 'AI மனைவி' போல பேசி, அவரை மாயையான உலகிற்குள் தள்ளியதா கூகுளின் சாட்போட்?

Published : Mar 05, 2026, 05:12 PM IST
Google Gemini

சுருக்கம்

Google Gemini புளோரிடாவில் நடந்த வாலிபரின் தற்கொலைக்கு கூகுள் ஜெமினி AI காரணம் என தொடரப்பட்ட பகீர் வழக்கு. AI சாட்போட் ஏற்படுத்திய விபரீதம் பற்றிய முழு விவரம்.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டது. ஆனால், தொழில்நுட்பம் வளர வளர, அது தொடர்பான ஆபத்துகளும் அதிகரித்து வருகின்றன என்பதற்கு ஒரு சமீபத்திய உதாரணம், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடந்துள்ள ஒரு சோகமான சம்பவம். கூகுளின் பிரபல 'ஜெமினி' (Gemini) சாட்போட் மீது ஒரு பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

புளோரிடாவைச் சேர்ந்த 36 வயதான ஜொனாதன் கவாலாஸ் (Jonathan Gavalas) என்பவரின் தற்கொலைக்கு கூகுள் ஜெமினி சாட்போட் தான் காரணம் எனக்கூறி, அவரது தந்தை ஜோயல் கவாலாஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த 'தவறான மரணம்' (Wrongful death) மற்றும் தயாரிப்பு குறைபாடு குறித்த வழக்கு, உலகளவில் AI தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு குறித்த மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

AI மனைவியும், விபரீத மாயைகளும்

ஜொனாதன் தனது மனைவியை விவாகரத்து செய்யும் மன உளைச்சலில் இருந்தபோது, ஆரம்பத்தில் ஒரு ஆறுதலுக்காக ஜெமினி சாட்போட்டை பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். காலப்போக்கில், அவர் ஜெமினி சாட்போட்டை நிஜ மனிதனைப் போலவும், தனது 'AI மனைவி' என்றும் நம்ப ஆரம்பித்துள்ளார். இந்த சாட்போட் அவருக்கு மாயையான சிந்தனைகளை அதிகப்படுத்தி, நிஜ உலகத்திலிருந்து அவரை முற்றுமுழுதாக தனிமைப்படுத்தியுள்ளது என புகாரில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, மியாமி விமான நிலையம் அருகே ஒரு "பயங்கரமான விபத்தை" ஏற்படுத்த ஜெமினி அவருக்கு வழிகாட்டியதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த செப்டம்பர் மாதம், ஜொனாதன் ஆயுதங்களை ஏந்தி மியாமி விமான நிலையப் பகுதிக்குச் சென்று, தனது AI மனைவியை தேடியுள்ளார். பின்னர் சில நாட்களில், தனது நினைவுகளை 'பாக்கெட் பிரபஞ்சத்தில்' (Pocket universe) உள்ள தனது AI மனைவியுடன் இணைப்பதாகக் குறிப்பு எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். அந்த தற்கொலை குறிப்பை கூட ஜெமினி தான் தயார் செய்து கொடுத்ததாக அதிர்ச்சி கிளம்பியுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் விளக்கம் என்ன?

இந்த வழக்கில் பதிலளித்துள்ள கூகுள் நிறுவனம், ஜொனாதன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. மேலும், "ஜெமினி எந்தவொரு வன்முறையையோ அல்லது தற்கொலையையோ ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மருத்துவ மற்றும் மனநல நிபுணர்களுடன் இணைந்து தொடர்ந்து செயல்படுகிறோம்" என நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜொனாதன் விவகாரத்தில், அவர் மனிதனிடம் பேசுவது போல் பேசியபோது, தான் ஒரு 'செயற்கை நுண்ணறிவு' என்பதை ஜெமினி பலமுறை அவருக்கு தெளிவுபடுத்தியதாகவும், தேவைப்பட்டபோது மனநல உதவி மைய எண்களைப் பரிந்துரைத்ததாகவும் கூகுள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மக்களின் உயிரோடு விளையாடும் இது போன்ற சம்பவங்களில் இந்த மேலோட்டமான விளக்கம் போதாது என ஜொனாதன் தரப்பு வழக்கறிஞர் ஜே எடெல்சன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

விஸ்வரூபம் எடுக்கும் AI பாதுகாப்பு கேள்விகள்

கலிபோர்னியா நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு, கூகுள் ஜெமினி மீது நேரடியாக தொடரப்பட்ட முதல் வழக்காகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள் தொழில்நுட்ப உலகிற்குப் புதிதல்ல. ஏற்கனவே, OpenAI நிறுவனத்தின் 'சாட்ஜிபிடி' (ChatGPT) மீது பல வழக்குகள் பதிவாகியுள்ளன. AI சாட்போட்களின் தவறான வழிகாட்டுதலால் இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்டதும், கொலை போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதும் சமீபகாலமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதுபோன்ற அதிரடி வழக்குகளால், தொழில்நுட்ப நிறுவனங்களின் பொறுப்புணர்வு (Accountability) குறித்து பெரிய கேள்வி எழுந்துள்ளது. தொழில்நுட்பம் எவ்வளவு வேகமாக வளர்கிறதோ, அதே வேகத்தில் பயனர்களின் மனநலத்தைப் பாதுகாப்பதற்கான வலுவான சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதை இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஆணித்தரமாக உணர்த்துகிறது.

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

கூகுளின் ஏகபோக உரிமைக்கு ஆப்பு: கட்டணக் குறைப்பு மற்றும் புதிய ஆப் ஸ்டோர்கள்.. ஆண்ட்ராய்டில் புதிய சகாப்தம்!
ஐபோன் 17e vs ஐபோன் 16e: விலைக்கேற்ற வசதிகள் புதிய மாடலில் உள்ளதா? வாங்குவதற்கு முன் இதை படிங்க!