ஆபாச வீடியோவைக் காட்டி பெண் டாக்டரிடம் 59 லட்சம் அபேஸ் செய்த சைபர் கிரைம் கும்பல்!

By SG BalanFirst Published Jul 25, 2024, 11:13 PM IST
Highlights

48 மணிநேரத்திற்குப் பிறகு, டாக்டர் பூஜா 59.54 லட்சம் ரூபாயை மோசடி ஆசாமிகள் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். பிறகுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, நொய்டா செக்டார் 36ல் உள்ள சைபர் கிரைம் பிரிவில் திங்கள்கிழமை (ஜூலை 22-ஆம் தேதி) காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

நொய்டாவைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவரை 48 மணிநேரம் டிஜிட்டல் அரஸ்டு செய்து ரூ.59 லட்சம் பணம் பறிக்கப்பட்டுள்ளது. இதே சைபர் கிரைம் கும்பல் டெல்லி NCR பகுதியில் பலரை ஏமாற்றி வருவதாக போலீசார் கூறுகின்றனர்.

நொய்டா செக்டார் 77ல் வசிக்கும் டாக்டர் பூஜா கோயலுக்கு ஜூலை 13 அன்று ஒரு போன் கால் வந்தது. அதில் பேசியவர் தன்னை இந்திய தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார். டாக்டர் பூஜா தனது போனில் இருந்து ஆபாச வீடியோக்களைப் பரப்பி வருவதாகத் தெரிவித்தார்.

Latest Videos

பூஜா அந்தக் குற்றச்சாட்டை மறுத்திருக்கிறார். ஆனால் எதிர்முனையில் பேசியவர் அவரை வீடியோ காலில் வந்து பதில் அளிக்குமாறு கட்டாயப்படுத்தி இணங்க வைத்துள்ளார். வீடியோ காலில் பேசும்போது, ஆபாசப் படங்களைப் பரப்பும் குற்றத்துக்குக் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் மிரட்டியுள்ளனர். பூஜாவை தாங்கள் டிஜிட்டல் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.

48 மணிநேரத்திற்குப் பிறகு, டாக்டர் பூஜா 59.54 லட்சம் ரூபாயை மோசடி ஆசாமிகள் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். பிறகுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, நொய்டா செக்டார் 36ல் உள்ள சைபர் கிரைம் பிரிவில் திங்கள்கிழமை (ஜூலை 22-ஆம் தேதி) காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

டெல்லியில் மக்களை பயமுறுத்துவதற்கும் ஏமாற்றுவதற்கும் 'டிஜிட்டல் கைது' என்பதை ஒரு தந்திரமாக மோசடி செய்பவர்கள் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த மோசடிக்காரர்கள் சில நேரங்களில் தாங்கள் டார்கெட் செய்யும் நபரை ஒரு அறைக்குள் அடைத்து, தாங்களை அதிகாரிகள் போலக் காட்டிக்கொள்கிறார்கள். உண்மையான அதிகாரிகள் என்று நம்பவைக்க போலி ஐடி கார்டுகளையும் காட்டுகிறார்கள் என்று போலீசார் எச்சரிக்கின்றனர்.

முன்னதாக, டெல்லியின் சித்தரஞ்சன் பார்க் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா தாஸ்குப்தா என்ற 72 வயது மூதாட்டி ரூ.83 லட்சத்தை இதே போன்ற மோசடியில் இழந்துள்ளார்.  கடந்த சில மாதங்களில், இதுபோன்ற பத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவை தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்று நொய்டா சைபர் கிரைம் போலீசார் கூறுகின்றனர்.

மோசடிகளில் மாட்டிக்கொள்வதைத் தவிர்க்க, சந்தேகத்திற்கிடமான அழைப்புகளை, குறிப்பாக வாட்ஸ்அப் அல்லது வீடியோ அழைப்புகளை சரிபார்க்க வேண்டியது முக்கியம் என்று போலீசார் வலியுறுத்துகின்றனர்.

click me!