அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் சீனாவில் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டு என்ற பெருமையை பெற்று இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் 2021 நான்காவது காலாண்டு நிலவரப்படி சீன சந்தையில் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டு என்ற பெருமையை பெற்று இருக்கிறது. சீன சந்தையில் ஆறு ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக ஆப்பிள் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டாக உருவெடுத்து உள்ளது.
பண்டிகை காலத்தை ஒட்டிய காலாண்டில் சீன சந்தையில் ஆப்பிள் நிறுவனம் 23 சதவீத பங்குகளை பெற்றது. கவுண்ட்டர்பாயிண்ட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
"ஹூவாய் நிறுவனத்தின் தொடர் சரிவு மற்றும் ஐபோன்களின் விலை நிர்ணயம் போன்ற காரணங்களால் ஆப்பிள் இந்த நிலையை எட்டியுள்ளது. கடந்த செப்டம்பரில் ஐபோன் 13 அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து ஆப்பிள் சீனாவில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறது," என சந்தை ஆய்வாளர் மென்மெங் சேங் தெரிவித்தார்.
"சீனாவில் சற்றே குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்ட காரணத்தால் புதிய ஐபோன் 13 சீரிஸ் ஆப்பிள் நிறுவன வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக மாறி இருக்கிறது. இத்துடன் புது ஐபோன் அம்சங்கள், 5ஜி கனெக்டிவிட்டி உள்ளிட்டவையும் விற்பனை அதிகரிக்க காரணங்களாக இருக்கின்றன. அமெரிக்க தடை உத்தரவு காரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் போட்டியாளரான ஹூவாய் தொடர்ந்து விற்பனையில் சரிவை சந்தித்து வருகிறது," என அவர் மேலும் தெரிவித்தார்.
சீனாவில் ஸ்மார்ட்போன் விற்பனை காலாண்டு அடிப்படையில் ஒப்பிடும் போது இரண்டு சதவீதமும், வருடாந்திர அடிப்படையில் ஒன்பது சதவீதமும் சரிவை சந்தித்துள்ளது. சீனாவின் ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் விற்பனை கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து சரிவடைந்த நிலையிலேயே இருக்கிறது.