வளையும் இறக்கைகளை கொண்ட, முதல் வர்த்தக விமானம் இதுவே ஆகும். தொடர் சோதனைகளுக்கு பிறகு, தகுதி சான்று பெற்று 2021-ல் பொதுபயன்பாட்டிற்காக 777x அறிமுகப்படுத்தப்படும் என போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
போயிங் 777x விமானத்தின் சோதனை ஓட்டம் நிறைவு..!
போயிங் நிறுவனத்தின், வளையும் இறக்கைகளை கொண்ட புதிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
போயிங் நிறுவன விமானங்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கியதை தொடர்ந்து, அதன் வர்த்தகம் அதிகளவில் பாதிக்கப்பட்டது. போயிங் 777x மாடலின் அறிமுகமும், தொடர்ந்து தள்ளிப்போனதால் அந்நிறுவனத்திற்கு எதிராக பல கருத்துக்கள் பரவ தொடங்கின.
இந்த நிலையில் நேற்று, போயிங் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை விமானமான, போயிங் 777x வாஷிங்டன் நகரில் தொடங்கி 4 மணி நேரம் வெற்றிகரமாக வானில் பறந்து, சியாட்டல் நகரை வந்தடைந்தது.
வளையும் இறக்கைகளை கொண்ட, முதல் வர்த்தக விமானம் இதுவே ஆகும். தொடர் சோதனைகளுக்கு பிறகு, தகுதி சான்று பெற்று 2021-ல் பொதுபயன்பாட்டிற்காக 777x அறிமுகப்படுத்தப்படும் என போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
காம்போசைட் உலோகங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த விமானம், பெரிய ஜன்னல்களோடு, பயணிகளின் இருக்கை அமைப்புகளும் மாற்றி அமைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தின் தனித்துவமாக, இறக்கைகள் வளையும் முனைகள் குறிப்பிடப்படுகிறது. இது விமான இறக்கையின் மொத்த அகலத்தை, 235 அடியிலிருந்து 213 அடியாக குறைக்கிறது. இதன் காரணமாக, தற்போதுள்ள விமான ஓடு தளங்களில் இதற்கென எந்த பெரிய மாற்றமம் செய்ய வேண்டியதில்லை.
போயிங்-777x விமானத்தில் 2 வகைகள் உள்ளன. 777x-8 வகை விமானம் 8,730 நாட்டிகல் மைல் வேகத்தில், 384 பயணிகளை சுமந்து செல்ல கூடியது.
777x-9 வகை விமானம் 7, 285 நாட்டிகல் மைல் வேகத்தில், 426 பயணிகளை சுமந்து செல்ல கூடியது. மேலும், 251 அடி நீளத்தில் மிகா நீளமான வர்த்தக விமானம் என்ற பெருமையும் இதையே சேரும் என போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தனது வர்த்தக பயணத்தை தொடங்க உள்ள இந்த விமானங்களை தற்போதே 8 ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் முன்பதிவு செய்துள்ளன. இதில் பிரிட்டிஷ் ஏர்வேஸ், கேதே பசிபிக், எமிரேட்ஸ், லுப்தான்ஸா மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
முன்னதாக கடந்த 2 ஆண்டுகளில் நிகழ்ந்த 2 பெரும் விமான விபத்துகளில் 346 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பல விமான நிறுவனங்கள், போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் இயக்குவதை நிறுத்தின.
இதையடுத்து அந்த நிறுவன தலைமை செயல் அதிகாரியான டென்னிஸ் முலென்பர்க் பணி நீக்கம் செய்யப்பட்டு, கடந்த 2 வாரங்களுக்கு முன்பு டேவிட் கால்ஹவுன் நியமிக்கப்பட்டார். அவருக்கு 1.4 மில்லியன் டாலர் வருடாந்திர சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 737 மேக்ஸ் பிரச்சனையை தீர்த்தால், மேலும் 26 புள்ளி 5 மில்லியன் அமெரிக்க டாலர் தருவதாக அவருக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது.