மோசடி வலையில் சிக்கி பணத்தை இழக்காமல் இருக்க, கிரிப்டோ மோசடிகள் எப்படி நடக்கின்றன? இந்த மோசடியில் சிக்காமல் இருப்பது எப்படி? என்பதைத் தெரிந்துகொள்ளவது நல்லது.
பெங்களூருவைச் சேர்ந்த 53 வயதான பொறியாளர் சமீபத்தில் கிரிப்டோகரன்சி மோசடியில் சிக்கியுள்ளார். இதனால் அவருக்கு ரூ.95 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. மோசடி ஆசாமிகள் கணிசமான வருமானத்திற்கு உத்தரவாதம் உண்டு என்று கூறி பிட்காயின்களில் முதலீடு செய்யும்படி வற்புறுத்தியுள்ளனர்.
இத்தகைய மோசடி வலையில் சிக்கி பணத்தை இழக்காமல் இருக்க, கிரிப்டோ மோசடிகள் எப்படி நடக்கின்றன? இந்த மோசடியில் சிக்காமல் இருப்பது எப்படி? என்பதைத் தெரிந்துகொள்ளவது நல்லது.
கிரிப்டோ மோசடி என்றால் என்ன?
கிரிப்டோ மோசடி என்பது முதலீட்டாளர்களை ஏமாற்றி அவர்களின் கிரிப்டோகரன்சி அல்லது தனிப்பட்ட தகவல்களைப் அபகறிக்கும் மோசடித் திட்டமாகும்.
இந்த மோசடிக்காரர்கள் இன்னும் பரவலாக பொதுப் பயன்பாட்டுக்கு வராமல் இருக்கும் சிக்கலான கிரிப்டோகரன்சி உலகத்தைப் பற்றி கட்டுக்கதைகளைக் கூறி நம்ப வைத்து பணத்தைப் பறிக்கிறார்கள். விரைவாக அதிக லாபம் கிடைக்கும் என்று நம்ப வைக்க பல்வேறு தந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர்.
கிரிப்டோ மோசடிகள்:
மோசடி செய்பவர்கள் கிரிப்டோகரன்சியின் விலையை செயற்கையாக உயர்த்தி, பின்னர் திடீரென தங்களுடைய பங்குகளை விற்று, விலையைக் குறைத்துவிடுவார்கள். இவ்வாறு சந்தேகத்திற்கு இடமில்லாமல் முதலீட்டாளர்களுக்கு மதிப்பில்லாத டோக்கன்களை வழங்குகிறார்கள்.
புதிய கிரிப்டோகரன்சி திட்டத்தில் அதிக வருமானம் கிடைக்கும் என்று கூறுவார்கள். இந்த போலியான ஐசிஓக்கள் பல முதலீட்டாளர்களை ஈர்க்கின்றன. இருப்பினும், அவர்கள் சொல்லும் திட்டம் பெரும்பாலும் இருக்காது.
மோசடி செய்பவர்கள் அசல் கிரிப்டோகரன்சி பரிமாற்றங்கள் போல மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்திகளை அனுப்புகிறார்கள். அதில் உள்ள லிங்க் மூலம் பயனர்களின் தகவல்களைத் திருடுகிறார்கள்.
புதிய முதலீட்டாளர்களைச் சேர்த்துவிட்டால் அதிக வருமானத்தை ஈட்டலாம் என்று சொல்வார்கள். இறுதியில், புதிய உறுப்பினர்கள் இணைவது நின்றுபோனதும் ஏற்கெனவே செய்யப்பட்ட முதலீடுகளுடன் கம்பி நீட்டிவிடுவார்கள்.
மோசடி செய்பவர்கள் ஒரு கிரிப்டோகரன்சியை தாங்களே உருவாக்கி அதைப்பற்றி பொய் வாக்குறுதிகளைப் பரப்புகிறார்கள். அதை நம்பி பணத்தைப் போடுகிறவர்களிடம் பணத்தைப் பறித்துக்கொண்டு மாயமாகிறார்கள்.
கிரிப்டோ மோசடியைத் தவிர்க்க...
சிறிய முதலீட்டில் அதிக வருமானத்தைத் தருவதாக சொல்லும் உத்தரவாதத்தை ஒருபோதும் நம்பாதீர்கள். எச்சரிக்கையாக இருங்கள்.
வாட்ஸ்ஆப், டெலிகிராம் போன்றவற்றில் உள்ள முதலீட்டாளர்களின் குழுக்கள் தெளிவற்றதாகவோ அல்லது சந்தேகத்துக்கு இடமானதாகவோ தோன்றினால், முதலீடு செயவதில் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பெரும்பாலும் சரியாக ஆராய்ச்சி செய்யாமல் அவசரமாக எடுக்கும் முடிவுகளால்தான் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காகவே மோசடிக்காரர்கள் தங்களிடம் சிக்குபவர்களுக்கு முதலீடு செய்யுமாறு அதிக அழுத்தம் கொடுக்கிறார்கள்.
உரிமம் பெற்ற அல்லது நம்பமான தளங்கள் மூலம் மட்டுமே கிரிப்டோகரன்ஸியில் முதலீடு செய்வது நல்லது.
வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றம் சமூக வலைத்தளங்களில் வரும் இலக்கணப் பிழைகளுடன் மோசமாக எழுதப்பட்ட விளம்பரச் செய்திகளை நம்பாதீர்கள்.