ஏற்கனவே கார் வாங்கி பயன்படுத்துவோர் அதன் மைலேஜை அதிகப்படுத்த என்ன செய்ய முடியும் என சிந்திக்க துவங்கி உள்ளனர்.
இந்தியாவில் எரிபொருள் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. இதன் காரணாக பலர் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் மற்றும் CNG வாகனங்களை தேர்வு செய்து வாங்கி வருகின்றனர். இன்னும், பலர் வாகனங்களின் காத்திருப்பு காலத்தை கேட்டு, வாகனம் வாங்கும் திட்டத்தையே ஒத்திவைத்தும் வருகின்றனர்.
ஏற்கனவே கார் வாங்கி பயன்படுத்துவோர் அதன் மைலேஜை அதிகப்படுத்த என்ன செய்ய முடியும் என சிந்திக்க துவங்கி உள்ளனர். அந்த வகையில், கார் மைலேஜை அதிப்படுத்த என்னவெல்லாம் செய்ய முடியும் என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
திராட்டில்:
காரின் மைலேஜை அதிப்படுத்த முதலில் திராட்டிலில் கவனம் செலுத்த வேண்டும். திராட்டில் செய்யும் போது அதிக மென்மையாக இருக்க வேண்டும், சட்டென திராட்டிலை முடுக்கும் போது காரின் மைலேஜ் அடி வாங்க அதிக வாய்ப்புகள் உண்டு. இதன் காரணமாக காரின் மைலேஜ் எளிதில் குறைய தொடங்கி விடும். கார் அக்செல்லரேட் செய்யும் போது, மென்மையாக திராட்டில் கொடுத்தால் காரின் எரிபொருள் குறைவாக எடுக்கப்படும். இதனால் காரில் அதிக மைலேஜ் கிடைக்கும்.
ஐடில் நிறுத்தம்:
சமீபத்திய அதிநவீன கார் மாடல்களில் ஸ்டார்ட் / ஸ்டாப் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருந்தாலும், பலர் இந்த அம்சத்தை தவிர்த்து கார்களை ஐடிலில் வைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். கார்களை ஐடிலில் வைப்பது என்றால் கார் நிறுத்தப்பட்டு இருக்கும் போது என்ஜினை தொடர்ச்சியாக இயக்கிக் கொண்டு இருப்பதை குறிக்கும். இவ்வாறு செய்யும் போது காரின் எரிபொருள் வழக்கத்தை விட அதிகமாக செலவாகும்.
பொதுவாக கார்களை 60 நொடிகளுக்கும் மேல் ஒரே இடத்தில் நிறுத்த வேண்டி இருந்தால், காரின் என்ஜினை ஆப் செய்யலாம். இவ்வாறு செய்யும் போது கார் மைலேஜில் மாற்றம் ஏற்படுவதை கவனிக்க முடியும்.
டையரில் கவனம்:
பலரும் தங்களின் வாகனங்களில் உள்ள டையர் பிரெஷர் அளவை சீரான இடைவெளியில் சரிபார்க்கும் வழக்கம் கொண்டிருப்பதில்லை. கார்களை எடுத்து கொண்டு நீண்ட தூர பயணம் செல்லும் போது மட்டுமே, டையரில் பிரெஷர் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்கின்றனர். ஆனால் இது முற்றிலும் தவறான செயல் ஆகும். கார்களின் டையர் பிரெஷரை சீரான இடைவெளியில் சரிபார்த்து. தேவைப்படும் பட்சத்தில் காற்றை சரியான அளவில் நிரப்பிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும் போது கார்கள் அதிக மைலேஜ் வழங்கும்.
கியர் ஷிப்ட்:
கார்களின் மைலேஜை அதிகப்படுத்துவதில் கியர் ஷிப்ட் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. சிறப்பான மைலேஜ் பெற முடிந்த வரை அதிகபட்ச கியரில் வாகனத்தை ஓட்ட வேண்டும். குறைந்த கியரில் வாகனம் ஓட்டும் போது அதிக எரிபொருள் செலவாகும். இது தவிர பெட்ரோல் கார்களின் ஆர்.பி.எம். அளவை 2 ஆயிரத்திலும், டீசல் கார்களில் ஆர்.பி.எம். அளவுகளை 1,500-இல் தொடங்கி 1,700 வரை செட் செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்யும் போது கார் மைலேஜ் அதிகரிக்கும்.
ஏ.சி.:
கார்களில் உள்ள குளிர்சாதன வசதி காரின் எரிபொருளை பெருமளவு குடிக்கும். எனினும், கார்களை இந்த காலத்தில் ஏ.சி. இல்லாமல் இயக்குவது அதன் இண்டீரியர்களை எளிதில் பாதிப்படைய செய்து விடும். இதனால் கார்களின் ஏ.சி. பயன்பாட்டை மிச்சம் செய்தால், மைலேஜ் அளவுகளில் மாற்றத்தை எதிர்பார்க்க முடியும். இதற்கு முடிந்த வரை காரின் ஏ.சி.யை அதன் மிக குளிர்ந்த நிலையில் வைப்பதற்கு பதில், தேவைக்கு ஏற்ற அளவில் அதன் மின்விசிறி வேகத்தை செட் செய்து கொள்ளலாம். ஏ.சி.யின் மின்விசிறி வேகம் காரின் மைலேஜை பாதிக்காது.