இந்த ஆண்டு முழுக்க 4ஜி சேவைகளை வெளியிடுவதில் பி.எஸ்.என்.எல். கவனம் செலுத்த முடிவு செய்து உள்ளது.
இந்தியாவில் அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் 5ஜி சேவைகளை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. எல்லாமே திட்டமிட்டப்படி நடக்கும் பட்சத்தில் தனியார் டெலிகாம் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வி உள்ளிட்டவை இந்த ஆண்டு இறுதியில் 5ஜி சேவைகளை வெளியிடும் என எதிர்பார்க்கலாம். இந்த நிறுவனங்கள் 5ஜி சேவைகளை வெளியிட தடையாக இருப்பது ஸ்பெக்ட்ரம் ஏலம் மட்டும் தான் எனலாம்.
மத்திய அரசு சார்பில் 5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம் நடைபெறும் தேதி இதுவரை அறிவிக்கப்படாமலே உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் 5ஜி சேவை எப்போது அறிமுகமாகும் என்பதும் மிகப்பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது. முன்னதாக டெலிகாம் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் வெளியிட்ட தகவல்களின் படி இந்தியாவில் 5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம் இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் நடைபெறும் என அறிவித்து இருந்தார்,
எதுவாயினும், தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு இவை அனைத்தும் அதி வேகமாக நடைபெற்று விடும். இதே நிலை அரசு சார்பில் நடத்தப்படும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு மட்டும் பொருந்தாது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்தியாவில் பி.எஸ்.என்.எல். 5ஜி சேவைகள் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
பி.எஸ்.என்.எல். 5ஜி:
பி.டி.ஐ. வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது 5ஜி சேவைகளை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யும் என கூறப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு முழுக்க 4ஜி சேவைகளை வெளியிடுவதில் பி.எஸ்.என்.எல். கவனம் செலுத்த முடிவு செய்து உள்ளது. இதற்காக பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஏற்கனவே 4ஜி கோர் உருவாக்கி விட்டது. இதனை உருவாக்க பி.எஸ்.என்.எல். நிறுவனம் மத்திய டெலிமேடிக்ஸ் வளர்ச்சி அமைப்பு மற்றும் டி.சி.எஸ். போன்ற நிறுவனங்கள் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.
தற்போது வெளியிடப்பட இருக்கும் 4ஜி சேவைகளை போன்றே 5ஜி சேவைகளை வழங்குவதிலும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் உள்நாட்டு 5ஜி தொழில்நுட்பங்களை பயன்படுத்த இருக்கிறது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் 5ஜி சேவையை 4ஜி கோர் மீது வழங்க இருக்கிறது. அதன்படி பி.எஸ்.என்.எல். நிறுவனம் 5ஜி NSA தொழில்நுட்பத்தை கொண்டு 5ஜி சேவைகளை வழங்க இருக்கிறது. ஆனால் இவ்வாறு செய்ய பி.எஸ்.என்.எல். நிறுவனம் முதலில் 4ஜி உள்கட்டமைப்புகளை வைத்து இருக்க வேண்டும்.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் முதற்கட்டமாக பூனே, மகாராஷ்டிரா மற்றும் கேரளா போன்ற பகுதிகளில் முதற்கட்டமாக 4ஜி சேவைகளை வழங்க திட்டமிட்டு உள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் கேரளா மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் 4ஜி நெட்வொர்க் சோதனையை துவங்க இருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் நாடு முழுக்க பி.எஸ்.என்.எல். 4ஜி சேவைகள் கிடைக்கும்.