வாட்ஸ்அப் சேனல் அம்சத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்திய உடனே பல இந்திய பிரபலங்களும் நிறுவனங்களும் தங்கள் சேனலை உருவாக்கியுள்ளனர்.
மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் செயலியில் சேனல்கள் அம்சத்தை இந்தியாவில் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சம் முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை தனிப்பட்ட முறையில் பெறுவதற்கான வசதியை வழங்குகிறது. வாட்ஸ்அப் சேனல்கள் அம்சத்தின் மூலம் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தகவல் பகிர்வுக்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
இந்த அம்சத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியதை அறிவித்த பிறகு, பல இந்திய பிரபலங்களும் வாட்ஸ்அப் சேனலில் இணைந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி, பிரதமர் மோடியும் உள்ளிட்ட பலர் வாட்ஸ்அப் சேனல்களைத் தொடங்கியுள்ளனர்.
"வாட்ஸ்அப் சமூகத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி! தொடர்ச்சியான தொடர்புகளின் பயணத்தில் இது இன்னும் ஒரு படி நெருக்கமாக உள்ளது. இங்கே இணைந்திருப்போம்! புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் இருந்து ஒரு படம் இதோ…” என்று வாட்ஸ்அப் சேனல்களில் தனது முதல் பதிவை பிரதமர் மோடி எழுதியிருக்கிறார்.
வாட்ஸ்அப் பயனர்கள் தங்களுக்குப் பிடித்த சேனல்களைத் தேர்வு செய்து பின்தொடரலாம். பின்தொடரும் சேனலில் வெளியாகும் பதிவுகள் வாட்ஸ்அப்பில் அப்டேட்ஸ் பகுதியில் இருக்கும். சேனலில் புதிய பதிவு வந்தால் அதற்கான நோட்டிஃபிகேஷன் பெறும் வசதியையும் இருக்கிறது.
வாட்ஸ்அப் சேனல் மற்றும் வாட்ஸ்அப் குரூப் இடையே ஒரு முக்கியமான அம்சம் வேறுபாடாக உள்ளது. குரூப்பில் இணைந்தால் அதில் ஏற்கெனவே உள்ள மற்ற உறுப்பினர்களுடன் உரையாடும் வாய்ப்பு இருக்கும். ஆனால், சேனலில் அதனைத் தொடங்கியவர் மட்டுமே பதிவுகளைச் செய்வார். சேனலை பின்தொடரும் அனைவரும் தாங்கள் விரும்பும் நேரத்தில் அந்தப் பதிவுகளைப் பார்க்கவும் படிக்கவும் செய்யலாம்.
வாட்ஸ்அப் சேனலில் இணைவது எப்படி?
முதலில், வாட்ஸ்அப் செயலியை சமீபத்திய வெர்ஷனுக்கு அப்டேட் செய்துகொள்ளவும். பின் வாட்ஸஅப்பைத் திறந்து, Chats பகுதிக்கு அடுத்து உள்ள Updates பகுதிக்குச் செல்லவும். கீழே உள்ள சேனல்களில் விருப்பமானதை தேர்வு செய்து Follow என்ற பட்டனை கிளிக் செய்தால் அந்தச் சேனலில் இணைந்துவிடலாம்.