ஐரோப்பாவில் உள்ள பயனர்களுக்கு விளம்பரம் இல்லாமல் சேவையை வழங்குவதற்காக இந்த ப்ரோ வெர்ஷன் குறித்து பரிசீலிக்கப்படுகிறது எனச் சொல்லப்படுகிறது.
ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளில் இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் பேஸ்புக் (Facebook) சமூக வலைத்தளங்களில் கட்டண சேவையைக் கொட்டுவர மெட்டா நிறுவனம் முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தொழில்நுட்பத் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் மெட்டா நிறுவனம், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒழுங்குமுறை விதிமுறைகளால் ஏற்படும் சிக்கல்களால் பாதிக்கப்படுவதாகக் கருதுகிறது. இதனால், நிறுவனத்தின் வணிகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து வரவிருக்கும் ஆண்டுகளிலும் பல கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் அதே வேளையில் சட்டத்திற்கும் இணங்குவதற்கான வழியைக் கண்டறிய முயற்சி செய்கிறது. தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஐரோப்பாவில் மெட்டாவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்களில் கட்டணம் பெறும் அம்சத்தை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது எனத் தெரிகிறது.
ஐரோப்பாவில் உள்ள பயனர்களுக்கு விளம்பரம் இல்லாமல் சேவையை வழங்குவதற்காக இந்த ப்ரோ வெர்ஷன் குறித்து பரிசீலிக்கப்படுகிறது எனச் சொல்லப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் புதிய பெய்டு வெர்ஷனை மெட்டா எப்போது தொடங்கும் தெரியவில்லை. கட்டண நிர்ணயம் குறித்தும் எந்தத் தகவலும் இல்லை.
ஐரோப்பாவில் மெட்டாவின் போராட்டம்
டிசம்பர் 2022 இல், ஐரோப்பிய ஆணையம் மெட்டாவின் ஆன்லைன் விளம்பரம் தொடர்பான நடைமுறைகள் குறித்து விசாரணையைத் தொடங்கியது. மெட்டா தனது பேஸ்புக் மார்க்கெட்பிளேஸ் (Facebook Marketplace) சேவையை அதன் சமூக வலைதளமான பேஸ்புக்குடன் இணைத்து, சந்தை அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருக்கிறதா என்பதை சரிபார்க்க ஐரோப்பிய ஆணையம் விசாரணையில் இறங்கியது.
ஐரோப்பியா - அமெரிக்கா இடையேயான தரவு பரிமாற்றத்தை அனுமதிக்கும் ஒப்பந்தத்தை ஜூலை 2020 இல் ஐரோப்பிய நீதிமன்றம் செல்லாது என்று அறிவித்தது. இதன் எதிரொலியாக ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த பயனர்கள் பற்றிய தரவுகளை அமெரிக்காவிற்கு பகிர முடியாது என்றால், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு முற்றிலுமாக வெளியேறுவதாகவும் மெட்டா தெரிவித்தது.