Zakir Hussain: வெளியே போடா… கொன்னுடுவேன்.. ஸ்ரீரங்கம் கோயிலில் துரத்தப்பட்ட நாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன்

By manimegalai aFirst Published Dec 11, 2021, 8:12 PM IST
Highlights

திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் சென்ற பரதநாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் இஸ்லாமியர் என்பதால் கோயிலைவிட்டு துரத்தப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் சென்ற பரதநாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் இஸ்லாமியர் என்பதால் கோயிலைவிட்டு துரத்தப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

புகழ் பெற்ற பரத நாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக பரத நாட்டிய கலைஞராகவும், சிறந்த வைணவ சொற்பொழிவாளராகவும் இருப்பவர். மத்திய அரசின் சமூக நல்லிணக்க விருது, கலைமாமணி விருது, நாட்டிய செல்வன் விருது என பல்வேறு விருதுகளை அள்ளி குவித்தவர்.

நேற்று நண்பகல் நேரம் திருச்சியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் கோயிலுக்கு  சென்றிருக்கிறார். அப்போது அங்கே இருந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் அவரை மதத்தின் பெயரை சொல்லி புண்படுத்தும் வார்த்தைகளை சொல்லி கோயிலில் இருந்து வெளியேற்றி இருக்கிறார்.

நம்பிள்ளை ஏடு சொன்ன இடத்தில் ஜாகீர் உசேன் பார்த்து சத்தம் போட ஆரம்பித்த ரங்கராஜன் நரசிம்மன், ரங்கா மண்டபம் வரையில் விடவில்லை. வெளியே போடா, கொலை பண்ணிடுவேன் என்று சத்தம் போட்டுக் கொண்டே இருந்திருக்கிறார். வேறு வழியேதும் தெரியாத ஜாகீர் உசேனும் அங்கிருந்து வெளியேறி இருக்கிறார்.

கோயிலில் இருந்து அவர் வெளியேற்றப்பட்ட சம்பவம் பலராலும் அறியப்படாத நிலையில் இந்த சம்பவத்துக்கு பின்னர் ரத்த அழுத்தம் அதிகமாகி சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருக்கிறார் ஜாகீர் உசேன். தமக்கு ஏற்பட்ட அவமானத்தை அவர் பேஸ்புக் பதிவில் போட்ட பின்னர் தான் இந்த விவகாரம் வெளி உலகுக்கு தெரிய வந்திருக்கிறது.

தமது பேஸ்புக் பதிவில் ஜாகீர் உசேன் பதிவிட்டுள்ள விவரம் வருமாறு: நான் என் தாய்வீடாக கருதும், நாள்தோறும் நாவிலும் நெஞ்சிலும் ஏற்றி தொழும் தென்னரங்கனை என்னரங்கனாக கணப்பொழுதும் மறவாது கருதி கொண்டு இருக்கும் திருவரங்கத்தில் இருந்து மத வெறியனால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டேன்.

காரணம் என் பெயர். முதன்முறையாக நான் இம்மதத்திற்கு தொடர்புடையவன் அல்ல என ஒரு மிகபெரும் சமூகமே பார்த்து கொண்டிருக்க அரங்கனை காண தடை செய்யப்பட்டு பல அவமானங்களுக்கு இடையே துரத்தப்பட்டேன்.

இக்காயம் என்னை என்றென்றும் உறுத்திக் கொண்டே இருக்கும். ஆனாலும் என் பற்று அரங்கனையும், ஆண்டாளையும் விட்டு அணு அளவும் அகலாது. காலம் திருப்பாணனை உள்ளழைத்தது போல் என்னையும் என் நம்பிக்கையையும் ஓருநாள் ஏற்கும். அரங்கன் என்றும் எமக்கு துணை என்று பதிவிட்டு உள்ளார்.

அவரின் இந்த பதிவுக்கு பின்னரே ஸ்ரீரங்கம் கோயிலில் ஜாகீர் உசேனுக்கு ஏற்பட்ட அவமானம் வெளியே தெரிந்திருக்கிறது. ஆனால், தான் என்பதை தமது பெற்றோர் யார் என்று சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார் ஜாகீர் உசேன்.

அவர் கூறியிருப்பதாவது: இஸ்லாமிய பெற்றோருக்கு நான் பிறந்தேன். என்னுடைய பெரியப்பாவுக்கு குழந்தை இல்லை. ஆகையால் என்னை தத்து கொடுத்துவிட்டனர். என் பெரியப்பா இந்து நாயுடு சமூகத்தை சேர்ந்த அலமேலு மங்கா என்பவரை கல்யாணம் செய்து கொண்டார். அவர் பெரிய பெருமாள் பக்தர். அவரின் தாக்கம் தான் பெருமாளை வணங்க வைத்தது.

பரத நாட்டியன் கற்றுக் கொண்டு ஆடுகிறேன். இந்து மத நம்பிக்கைகளுடன் இருக்கும் என்னை தடுப்பது எப்படி சரி? ஆண்டவன், பக்தன் இருவருக்கும் இடையில் நிற்க ரங்கராஜன் யார்? ஸ்ரீரங்கத்தில் துலுக்க நாச்சியாருக்கு சன்னிதி இருக்கிறது.

பெருமாளுக்கு லுங்கி கட்டி ரொட்டியை நைவேத்தியம் செய்கின்றனர். பெருமாள் இஸ்லாமியர்களை ஏற்கும் போது என்னை ஏன் தடுக்கிறார் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் ஜாகீர் உசேன். ஸ்ரீரங்கம் கோயிலில் நடந்துள்ள விவரம் பற்றி கூறி இருக்கும் அமைச்சர் சேகர்பாபு, சட்டத்தை யாரும் கையில் எடுக்க முடியாது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

ஜாகீர் உசேன் வெளியேற்றம் குறித்து கருத்து தெரிவித்தவர்கள், பல கேள்விகளை முன் வைக்கின்றனர். திருவல்லிக்கேணி கோயிலில் வெள்ளம் வந்த தருணத்தில் சேறும், சகதியுமான தானே கோயில் இருந்தது. அதை சுத்தம் செய்தவர்கள் இஸ்லாமியர்கள் தான், அப்போது தெரியாத மதம் ஜாகீர் உசேனுக்கு மட்டும் ஸ்ரீரங்கன் கோயிலில் தெரிய வந்தது எப்படி? என்று கேள்வி எழுப்புகின்றனர்.

நிலைமை மெல்ல, மெல்ல விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துள்ள நிலையில், கடவுளை நம்புவர்கள் அவர்கள் யாராக இருந்தாலும் கோயிலுக்குள் செல்லும் போது தடுக்க கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கைகளும் எழ ஆரம்பித்து இருக்கின்றன…!!

click me!