
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சி கே ஆசிரமம் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்ற மாணவன் இன்று கரியம்பட்டி பகுதியில் உள்ள திருவள்ளுவர் கலைக்கல்லூரிக்கு அரியர் தேர்வு எழுத சென்றுள்ளார். அப்போது தன்னுடைய தோழிகளான ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியைச் சேர்ந்த ரம்யா என்றவரையும் அதேபோல ஜெய் பீம் நகர் பகுதியைச் சேர்ந்த பிரியங்கா என்பவரையும் ஒரே இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு கல்லூரிக்கு சென்றுள்ளார்.
அப்போது கந்திலி அருகே வந்து கொண்டிருந்த டிப்பர் லாரியை முந்தி செல்ல முயன்று இளைஞர் இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்கி உள்ளார். ஆனால் அப்போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது லேசாக உரசியதில் நிலை தடுமாறி கீழே விழுந்து மூவரும் லாரியின் அடியில் சிக்கினர். அப்போது மாணவி ரம்யாவின் மீது டிப்பர் லாரி ஏரி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த சக்திவேல் மற்றும் பிரியங்காவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த இருவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியர் எக்ஸாம் எழுத சென்ற நிலையில் டிப்பர் லாரி மோதி மாணவியின் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.