என்.எல்.சி.யில் வேலைக் கேட்டும் கிடைக்காததால் சான்றிதழ்களை ஒப்படைக்க ஆட்சியரகம் வந்த இளைஞர்களால் பரபரப்பு…

First Published Aug 8, 2017, 6:10 AM IST
Highlights
Young people who were handing over certificates to work in NLC


கடலூர்

என்.எல்.சி.யில் பயிற்சி முடித்தபின்பு அங்கேயே வேலைக் கேட்டும் கிடைக்காததால் கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை திரும்ப ஒப்படைக்க ஆட்சியரகத்திற்கு இளைஞர்கள் வந்தனர்.

கடலூர் மாவட்டத்தில். ஐ.டி.ஐ. படித்துவிட்டு நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் இளைஞர்கள் பலர் பயிற்சி பெற்றனர். இவர்கள் பயிற்சி முடிந்ததும் என்.எல்.சி. நிறுவனத்தில் வேலைக் கேட்டு பல்வேறுப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் வேலைக் கிடைக்காததால், கடந்த மாதம் தங்கள் கல்விச் சான்றிதழ்களை ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க வந்தனர். அப்போது அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.

இந்த நிலையில் நேற்று மீண்டும் அவர்கள் தங்களின் கல்விச் சான்றிதழ்கள், வேலைவாய்ப்புப் பதிவு அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை திரும்ப ஒப்படைப்பதற்காக கடலூர் ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.

இதுபற்றி அவர்கள் கூறியது: “எங்கள் கோரிக்கைத் தொடர்பாக என்.எல்.சி. அதிபரிடம் பேச அனுமதி பெற்றுத் தரும்வரை ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்” என்றுத் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் ஆட்சியர் ராஜேசை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவைப் பெற்ற ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களை சமாதானப்படுத்தினார். இதனையேற்ற இளைஞர்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்துச் சென்றனர்.

click me!