குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரி அங்கப் பிரதட்சனை செய்த இளைஞர்; மக்களும் இணைந்து போராட்டம்...

First Published Nov 20, 2017, 8:29 AM IST
Highlights
Young people who demanded to rectify the bunker road People fight together ...


சேலம்
 
சேலத்தில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க கோரி அந்தச் சாலையில் இளைஞர் ஒருவர் அங்கப் பிரதட்சனை செய்து போராட்டம் நடத்தினார். அவருடன் இணைந்து மக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம், சேலம் மாநகராட்சி 47–வது வார்டுக்கு உட்பட்ட குகை பெரியார் வளைவு அருகில் முள்ளுவாடி அம்பேத்கர் தெரு உள்ளது.

இந்தப் பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படாததால் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சிதறி கிடப்பதால் மக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும், சைக்கிள், மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர்.

இந்தச் சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், முள்ளுவாடி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த இளைஞர் பார்த்திபன் தலைமையில் 50–க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரியும், நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.

அப்போது குண்டும், குழியுமான அந்தச் சாலையில் பார்த்திபன் படுத்து அங்கப் பிரதட்சனை செய்தபடி பெரியார் வளைவு பிரதான சாலைக்கு வந்தார். அதேப் பகுதியைச் சேர்ந்த சிலர் அவர் மீது தண்ணீரை ஊற்றி ஆதரவு தெரிவித்துச் சாலையை சீரமைக்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.

இதனையடுத்து பார்த்திபன் மற்றும் மக்கள் திருச்சி பிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்த செவ்வாய்பேட்டை காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பார்த்திபன் மற்றும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் செந்தில் மற்றும் அதிகாரிகளும் அங்கு வந்தனர். அப்போது, "பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெறுவதால் சாலையை சீரமைக்க முடியவில்லை என்றும், இருப்பினும் உடனடியாக பழுதடைந்து காணப்படும் சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் உறுதியளித்தனர்.

இதனை ஏற்றுக் கொண்ட மக்கள் சமாதானம் அடைந்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

tags
click me!