
போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதற்காக போலீசார் வைத்திருக்கும் தற்காலிக தடுப்புகளையே இருசக்கர வாகனத்தில் செல்லும் இளைஞர்கள், நெருப்புப் பொறி பறக்க இழுத்துச் செல்லும் அதிரவைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
புத்தாண்டு தினத்தில், போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வந்தனர். போலீசாரின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையும் மீறி வாகனங்களில் அதிகவேகமாக சென்று விபத்தில் சிக்கிய சம்பவங்களும், இந்த புத்தாண்டில் நடந்துள்ளது. அன்றைய தினம் மட்டும் 170 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக போலீசார் வைத்திருக்கும் சாலை தடுப்பை, இழுத்து செல்லும் காட்சி தற்போது வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இரு சக்கர வாகனத்தில் இழுத்து செல்லும் தடுப்புகளால், பின்னால் வருவோரை நிலைத்தடுமாற செய்து விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
சாலைகளில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறி வருகின்றனர். புத்தாண்டு தினம் அன்று அட்டகாசத்தில் ஈடுபட்ட 90-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.