சத்தியமங்கலம் - பண்ணாரி சாலையில் பைக்கில் சென்ற வாலிபரை, சிறுத்தை தாக்கியதில், படுகாயமடைந்தார். அவ்வழியாக செல்வோரை, சிறுத்தை விரட்டுவதால், பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.
சத்தியமங்கலம் - பண்ணாரி சாலையில் பைக்கில் சென்ற வாலிபரை, சிறுத்தை தாக்கியதில், படுகாயமடைந்தார். அவ்வழியாக செல்வோரை, சிறுத்தை விரட்டுவதால், பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.
சத்தியமங்கலத்தில் இருந்து பள்ளி, கல்லூரி, வேலை, வியாபாரம், விவசாயம் என பல்வேறு பணிகளுக்காக மக்கள் பண்ணாரி சாலையை பயன்படுத்தி வருகின்றனர். அடர்ந்த காட்டுக்கு இடையில் இந்த சாலையில் செல்வோர், விலங்குகளை கண்டு அச்சமடைந்து வருகின்றனர். இந்த காட்டு பகுதியில் மான், முயல், பாம்பு, நரி உள்பட பலவகை விலங்குகள் உள்ளன. சிறுத்தையும் அடிக்கடி வெளியே வந்து செல்வதாக அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கூறியுள்ளனர்.
undefined
இந்நிலையில், நேற்று மாலை ஒரு வாலிபர், பண்ணாரி சாலை வழியாக பைக்கில் சென்றார். அப்போது காட்டு பகுதியில் இருந்து வெளியே வந்த சிறுத்தை, திடீரென அவர் முன் வந்து நின்றது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், நிலைதடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார். இதில் சிறுத்தை அவர் மீது பாய்ந்து கடித்து குதறியது. இதில் அவர் படுகாயமடைந்தார்.
அந்த நேரத்தில் அவ்வழியாக சிலர் பைக்கில் வந்தனர். அவர்களை கண்டதும், சிறுத்தை பைக்கில் வந்தவர்களை நோக்கி ஓடியது. இதில், அந்த வாலிபர் உயிர் பிழைத்தார். உடனே ஓடி சென்று ஒரு மரத்தின் மீது ஏறி கொண்டார். இதற்கிடையில், சிறுத்தை விரட்டுவதை பார்த்ததும், பைக்கில் வந்தவர்கள், தங்களது வாகனங்களை அங்கேயே போட்டுவிட்டு மரத்தில் ஏறி கொண்டனர்.
ஆனால், மரத்தில் ஏறியவர்கள், எப்படியும் கீழே வந்து பைக்கை எடுக்க வேண்டும் என்பதை அறிந்து கொண்ட சிறுத்தை, அங்கேயே சுற்றி சுற்றி வந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும், கிராம மக்கள் மற்றும் வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். வன சரகர்கள், சிறுத்தையை பிடிக்க முயற்சிப்பதை அறிந்ததும், அது அங்கிருந்து தப்பிவிட்டது. இதையடுத்து அனைவரும் தங்களது வீடுகளுக்கு சென்றனர். பின்னர், படுகாயமடைந்த வாலிபரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.