
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மீரான்பாளையம் தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து. சென்னையில் பெயின்டராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி ரஷித் நிஷா (33). விளாத்திகுளம் தனியார் தொண்டு நிறுவனத்தில் களப் பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
இவர்களுக்கு 16 மற்றும் 13 வயதில் 2 மகன்கள் உள்ளனர். அதே பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கிறார்கள். ரஷித் நிஷா, தினமும் மொபட்டில் வேலைக்கு செல்வது வழக்கம்.
நேற்று காலை ரஷித் நிஷா, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, வேலைக்கு வழக்கம்போல் மொபட்டில் புறப்பட்டார்.
இந்நிலையில், நேற்று மாலை விளாத்திகுளம் அருகே சூரங்குடியில் இருந்து உச்சிநத்தம் செல்லும் சாலையின் ஓரத்தில், ஒரு மொபட் கேட்பாரற்று கிடந்தது. அருகே காட்டுப் பகுதியில் இளம்பெண் எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அருகில் 2 லிட்டர் கேனில் சிறிதளவு மண்ணெண்ணெய் இருந்தது.
இளம்பெண்ணின் உடலின் மேல் பகுதி மட்டும் தீயில் எரிந்து இருந்தது. கால்களில் தீக்காயம் இல்லை. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து சூரங்குடி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், சடலமாக கிடந்தது. ரஷித் நிஷா என தெரிந்தது.
தொடர்ந்து போலீசார் ரஷித் நிஷாவை கொலை செய்தது யார், கொலைக்கான காரணம் என்ன என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.