
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் நேருநகர் வீரபத்திரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமசந்திரன் (35). விவசாயி. இதே பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மனைவி சென்னம்மாள். இவர்களது மகன் வெங்கடேசன்.
ராமசந்திரனுக்கும், அண்ணாமலைக்கும் இடையே நிலம் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது. இதையொட்டி அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதைதொடர்ந்து கடந்த 2004ம் ஆண்டு, அண்ணாமலை குடும்பத்துடன் தனது வீட்டின் அருகில் உள்ள கொல்லை கொட்டகையில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற ராமசந்திரன், 3 பேரையும் அரிவாளால், சரமாரியாக வெட்டி கொலை செய்தார்.
இதுகுறித்து சாத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமசந்திரனை கைது செய்தனர். இந்த வழக்கு திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை நேற்று நீதிபதி மகிழேந்தி முன்பு வந்தது. இதை விசாரத்த நீதிபதி, ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை, ராமசந்திரன் கொடூரமாக கொலை செய்தது சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் மூலம் நிரூபனம் செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு ராமசந்திரனுக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மலு, இந்த தண்டனையை ஆயுட்காலம் முழுவதும் அவர் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.